ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து ஈரோடு நோக்கித் திருப்பூர் மாவட்ட வழியே சாலை மார்க்கமாக (ரோடு ஷோ) சென்றார். முதல்வர் பல்வேறு இடங்களில் பிரச்சார வேனில் நின்றபடியேவும், வேனில் பயணித்தபடியும் பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு சோ மேற்கொண்டார்.
செங்கப்பள்ளி அருகே பிரச்சார வாகனம் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. பயணத்தின் போது வாகனத்தை நிறுத்தி முதல்வர் விஜய் செய்த ஒரு செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். அப்போது தனது வாகனத்தில் இருந்தபடியே கூட்டத்தில் இருந்த ஒரு நபரை அடையாளம் கண்ட விஜய், வாகனத்தை நிறுத்த சொல்லி, அந்த நபரை அழைத்து வருமாறு தனது செக்யூரிட்டி இடம் கேட்டார். அங்கு வந்த திருப்பூர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட முன்னாள் நிர்வாகி வி.எஸ்.கார்த்திகேயனை தன் அருகில் அழைத்து, கைகுலுக்கி மிகவும் அன்போடு நலம் விசாரித்தார்.
மேலும் அவர் பரிசாக வழங்கிய வேல் மற்றும் பொன்னாடை ஆகியவற்றை பெற்றுகொண்ட விஜய் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் விஜய் மறக்காமல் மதிக்கும் குணத்திற்கு இந்தத் தருணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைத்துள்ளது என்று இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கூட்ட நெரிசலிலும் தனது பழைய மாவட்ட நிர்வாகியை சட்டென்று அடையாளம் கண்டுகொண்ட முதலமைச்சர் விஜய், உடனடியாகத் தனது வண்டியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகும், கட்சி தொடங்குவதற்கு முன்பாக தனக்காக உழைத்த பழைய 'விஜய் மக்கள் இயக்க' நிர்வாகியை மறவாமல், பாதுகாப்பு வளையங்களையும் மீறி வண்டியை நிறுத்தச் சொல்லி அவர் நலம் விசாரித்த இந்தத் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்