

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவின் இரண்டாம் கட்டம் இன்று சென்னை, நீலாங்கரையில் நடைபெற்றது.
இதில் பேசிய முதலமைச்சர் விஜய், "இதை சிலர் அரசியலாக்க முயற்சிக்கலாம் ஆனால் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. என் செல்லங்களிடம் நான் சொல்லியே ஆகவேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம், வாழ்க்கையில் எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் சொல்கிறேன்.
ஊழல் ரொம்ப பழசான ஒரு விஷயம் தான். ஆனால் மக்கள் அதற்கு பழகிவிட்டார்கள் என சொல்லி கடந்து போய்விட முடியாது. ஏனென்றால் அது ஒரு நாள் பட்ட நோய் போல, அதை சரி செய்ய என்னெல்லாம் செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்தே ஆக வேண்டும். இதையெல்லாம் சரி செய்ய முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் குறைந்தபட்சம் நாம் அதை கட்டுப்படுத்த முடியும் இல்லையா? அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் இல்லையா? அப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகளால் இங்கே சிலருடைய அடித்தளமே ஆடிப் போய் கிடக்கிறது. அது இங்கே வேண்டாம்...
சமீபத்தில் நடந்த ஊழல் பற்றி எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், செய்திகளில் பார்த்திருப்பீர்கள். மற்ற துறையில் ஏதாவது தவறு நடந்தால் அதில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். கோர்ட்டில் ப்ரொசீட் செய்வோம், கோர்ட் நடவடிக்கை எடுக்கும். ஆனால் ஒரு கல்வித் துறையில் ஊழல் நடக்கிறது என்றால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. உங்களை பாதிக்கும் விஷயத்தை எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்?
மற்ற துறைகளில் தவறு நடந்தால் பரவாயில்லையா? என்று சில இன்டலெக்சுவல்ஸ் கேட்பார்கள். எந்த துறையிலும் நடந்தாலும் தவறு தவறுதான். ஆனால் கல்வித் துறைதான் எல்லாவற்றுக்குமான அடிப்படை. நம்ம பசங்களுக்கு, பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் விட முக்கியம் கல்விதானே. வருங்கால தலைமுறை என்பவர்கள் அவர்கள்தானே.
பள்ளிகளின் பாதுகாப்பில் விளையாடி இருக்கிறார்கள். அதில் நடந்த பிரச்சனைதான் கும்பகோணம் விபத்து. இப்போது நினைத்தாலும் பதறுகிறது. ஆனால் அதே போல பள்ளியின் பாதுகாப்பில் ஊழல் செய்பவதையேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? அப்போது கூட நான் என்னுடைய டேபிள் முன் ஃபைல் இருக்கிறது என்றுதான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து சவுண்டு. "அது என்ன ஃபைல் இருக்காமே, திறந்துதான் பாருங்களேன்" என்று சவுண்டு விட்டார்கள்.
யாரு.. "ஐயோ வந்துட்டாரே, கலாய்ப்பாரே" (விஜய் டிவி ராமர் பாணியில் சொல்லிக் காட்டினார்) அவரு...
நான் சட்டமன்றத்தில் கையைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருப்பேன். ஆனால் அவர்களே ஆசைப்பட்டு கேட்கிறார்கள். வேறு என்ன செய்வது? சரி, ஃபைல்களைத் திறங்கள் சார்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் எல்லாம் படிக்கிற நூலக புத்தகங்களில் கூடவா? நானும் ஏஐ துறையில் நிறைய டெவலப்மெண்டுகள் நடக்கப் போகிறது, எல்லா துறையிலும் நாம் வளர்ச்சியைப் பார்க்கப் போகிறோம் என ஆசையாக எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் அதே ஏஐ வைத்து இவர்கள் ஆரம்ப காலத்திலேயே ஊழலை செய்திருக்கிறார்கள் என்றால் இவர்களை எல்லாம் என்ன செய்வது, எங்கே கொண்டு போய் வைப்பது என்று எனக்கு புரியவில்லை.
கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், பாரதிதாசன் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம்... இதெல்லாம் மாணவர்களாகிய நீங்கள் படிப்பதற்கு இருக்கிற நூலகங்கள். அதில் இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கிறது என்பது இப்போதுதான் வெளிவருகிறது. இன்னும் மற்ற நூலகங்களில் என்ன நடந்திருக்கிறது என்பது ஒன்னொன்னாக வெளியே வரும். இது அறிவுலகமா, ஊழல் உலகமா என்று எனக்கு தெரியவில்லை.
நான் அரசியலுக்கு வந்தது ஒவ்வொரு குடும்பத்துக்காகவும், ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கிற பசங்க, பிள்ளைங்க, வருங்கால தலைமுறையினருக்காக என சும்மா எல்லாம் சொல்லவில்லை. அப்படிப்பட்ட உங்களுக்கு உங்க வாழ்க்கையை பாதிக்கும் அளவு இப்படியெல்லாம் நடந்தால் இதையெல்லாம் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? அதனால்தான் சொல்கிறேன்.. நண்பா நண்பீஸ், உங்கள் அண்ணன் உங்களை எப்போதும் நல்வழியில் மட்டுமே நடத்திக்கொண்டு போவேன்." என பேச்சை முடித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.