

திருவாரூரில் இன்று திமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழா, தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், வயில்களில் ஆடு மாடு இந்த பக்கம் அந்த பக்கம் என்று மேயும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள் முதலில் ஒரு குதிரை போகும், அடுத்து ஒரு ஆடு போகும், ஒரு மாடு போகும் பின்னர் ஒரு மந்தையே போகும். அங்க போனால் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. இங்கேயாவது கொஞ்ச நஞ்சம் பசுமை தெரியும் ஆனால் அங்கு ஒன்றுமே தெரியாது. காய்ந்து போய் கிடக்குது.. பசுமை என நம்பி வந்துட்டோம் உடனே திரும்பக் கூடாது கொஞ்ச நாளாவது இருந்துட்டு போவோம். இப்படியான சூழல் தான் தற்போது உள்ளது என சூசகமாக தற்போது தமிழக வெற்றி கழக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளை அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் மறைமுகமாகசாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசியல் பற்றி கூறுகையில் அப்படியும் இப்படியும் மாறி மாறி நடக்கும்.. யாரையும் யாராலும் காணாமல் அடித்து விட முடியாது. பைத்தியம் பிடித்த தனமாக காணவில்லை என்கிறார்கள். எதை காணும்? என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அப்பாவை காணும் என்ற பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் கம்யூனிஸ்ட் முத்தரசன். மேலும் “நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதே என கட்சி தலைவர் மு.க ஸ்டாலினிடம் எந்தவித சோர்வும் இல்லை” என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்ற ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது, விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் குறுவை சாகுபடி மேற்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல சென்ற ஆண்டு குறுவை சாகுபடியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை, அணை திறக்கவில்லை ஒருபோக சாகுபடியாலது நடைபெறுமா என்ற நிலை எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக அரசு ஏற்கனவே 4 அணைகளை கட்டி விட்டது, போதாகுறைக்கு மேலும் மற்றொரு அணை கட்ட முயன்று வருகிறது. இதை தடுப்பதற்கு, விவசாயத்தை காப்பாற்றவும் அரசு என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை. டெல்டா மாவட்டங்களில் ஒரு போகம் சாகுபடி பணியாவது நடைபெற வாய்ப்பு ஏற்பட கூடிய சூழல் உருவாகுமா, கடும் பஞ்சத்தை நோக்கி நகருமா என்ற அச்சமும், கவலையும் விவசாயிகளிடம் இருந்துவருவதாக முத்தரசன் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.