“மத்திய அரசின் ஏஜென்டாக இல்லாமல்” - ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது.. கடுமையாக விமர்சித்த MP அபிஷேக் சிங்வி!

ஆளுநரின் நடவடிக்கை “கண்டிக்கத்தக்கது மற்றும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது”
Congress MP abhishek manu singhvi
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநில அரசியலில் உருவாகியுள்ள பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின்  நடவடிக்கை தற்போது கடும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, ஆளுநரின் நடவடிக்கை “கண்டிக்கத்தக்கது மற்றும் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம், தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 118 எனும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டாததால், ஆட்சியமைப்பில் “மேஜிக் எண்” எனும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து அபிஷேக் மனு சிங்வி, “மற்ற எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைத்து அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கு பதிலாக, ‘எனக்குத் திருப்தி இல்லை’ என்று கூறுவது ஜனநாயகத்தின் அடிப்படை மரபுகளை மீறுகிறது” என்றார்.

தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆதரவு கொடுத்த பின்பு, விஜய்க்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் டிவிகே-வின் 108 உறுப்பினர்களுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “பெரும்பான்மையை நிரூபிப்பது சட்டப்பேரவையில் நடைபெற வேண்டிய ஒன்று. அதை முன்கூட்டியே தடுக்க ஆளுநருக்கு உரிமை இல்லை” என்றும் சிங்வி தெரிவித்தார். "ஆளுநர் என்பவர் மத்திய அரசின் ஏஜென்டாக இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராகச செயல்பட வேண்டும்" என்று சிங்வி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பெரும்பான்மை இல்லாத போதும் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்ட முன் உதாரணமாக அவர் நினைவுபடுத்தினார். “அப்போது அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் 13 நாட்களில் பதவி விலகினார். அதே நடைமுறை இப்போது ஏன் பின்பற்றப்படவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், ஆளுநர் தொடர்ந்து தவெக-விடம் 118 ஆதரவுக் கடிதங்களை கோருவது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பும் சட்டரீதியான நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விஜய்யும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறார் என தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com