திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மறுபக்கம் பாரம்பரியமாக செய்வதுபோல உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்துத்துவ அமைப்புகள் சொல்லும் தூண் ஒரு சர்வே கல் என்றும் அதற்கும் கோவிலுக்கும் தொடர்பு இல்லை என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்காவுக்கு அருகில் உள்ள கல்லில் தீபம் ஏற்றுவதன் மூலம் இந்துத்துவ அமைப்புகள் வெறுப்பு அரசியலில் ஆதாயம் தேடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று தீபம் ஏற்றப்படுமா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. ஏற்கெனவே திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை நீக்கக்கோரி 6 மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமத்ஜி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரிக்க மதியம் 12:30 மணிக்குள் ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஆட்சியர் அப்போது ஆஜராகவில்லை.
பின்னர் கண்டிப்பாக 1:15 மணிக்குள் அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கண்டித்து வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நீதிமன்றம் வந்தடைந்தார்.
அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மனுவில் கூறியிருந்த 'திருப்பரங்குன்றம் பகுதிக்குள் வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை' என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவதாக பதிலளித்தது அரசுத் தரப்பு. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையிடுவதற்கு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதற்கு "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை உங்கள் நோக்கிற்கு மாற்ற வேண்டாம்" எனக் கூறிய நீதிபதிகள், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த விதத்திலும் உயர்நீதிமன்றம் தலையிடாது" என உறுதியளித்தனர். தொடர்ந்து, "உச்சநீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்த கூடாது என்பதற்காகத்தான் 144 தடை உத்தரவா?" எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், "உச்ச நீதிமன்ற உத்தரவைப் படித்தேன். அதில், "மாநில அரசு கோரினால்", மத்திய அரசு சி.ஆர்.பி.எஃப் உதவியை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசு கோரவில்லை. நாம் என்ன செய்வது?" என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "மாவட்ட ஆட்சியரின் நிஷாந்தின் மனதில் என்ன ஓடுகிறது?.." எனக் கேள்வி எழுப்பினார்.
"கடந்த ஆண்டு, தீபம் ஏற்றாமல் என்ன நடந்ததோ? அதேபோன்று தற்பொழுதும் நடைபெறுகிறது. அதனால்தான், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இருந்த காவல்துறை அதிகாரி இனிகோ தான் தற்பொழுதும் உள்ளார். மதுரையின் இளம் ஐஏஎஸ் அதிகாரி நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்வார்போல.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இந்த முறை கடுமையாக இருக்கும்" என எச்சரிக்கை விடுத்தனர்.
இத்துடன் மக்களின் மத உரிமையை நிலைநாட்ட வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 4 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
மதுரை ஆட்சியர் யார்?
மதுரை மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ஆட்சிப் பணி (IAS), தமிழ்நாடு கேடர் — 2018-ஆம் ஆண்டுப் பேட்சை சேர்ந்தவர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர், நாகர்கோவில் / ஓசூர் மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு வழிகாட்டுதல் (GUIDANCE) நிறுவனத்தின் செயல் இயக்குநர், சிப்காட் (SIPCOT) செயல் இயக்குநர், திருச்சி மற்றும் ஈரோடு பகுதிகளில் உதவி ஆட்சியர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்