
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியது அவரின் கருத்து அல்ல என்றும் சமூக சீர்த்திருத்தவாதி தெரிவித்த கருத்தை தான் பேசியதாகவும், பொன்முடி பேசிய பேச்சின் முழுமையான வீடியோவை பார்த்தால் தெரியும் என பொன்முடி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், 1972 ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுக்களின் விவரங்களையும் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், பொன் முடியின் பேச்சு அடங்கிய முழுமையான வீடியோ, மற்றும் 1972 ல் சமூக சீர்த்திருத்தவாதி பேசியிருந்த பேச்சு குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
பின்னர் இந்த வீடியோ மற்றும் ஆவணங்களையும் ஆய்வு செய்வதாக தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 16 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.