
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா? என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் நாளை நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பியது.
உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இத்தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார். அப்போது, அபராதம் செலுத்த வேண்டுமென்ற உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது தரப்பில் தான் தவறு இருப்பதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும் அதனை படித்து பார்த்து கையெழுத்திட்டிருக்க வேண்டுமெனவும் அப்படி செய்யவில்லை என்றால் அவர் ஆணையராக இருக்கவே தகுதியில்லாவர் என கூறினார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என தம்மை நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை தாங்கள் காட்டலாமா? எனவும் கட்டாமாக தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் நேற்று ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி உரிய பிரமாண பத்திரத்துடன் நாளை ஆஜராக வேண்டுமென ஆணையருக்கு உத்தரவிட்டார். அபராதம் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தலைமை நீதிபதி கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.