

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் சந்திப்பில் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் இன்று (19.09.26) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் இந்த நடைபெற்றது.
கடந்த 3-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என தெரிவித்திருந்தார். அதற்கான இடமாக பட்டினம்பாக்கத்தினை தமிழக அரசு தேர்ந்தெடுத்தது. இந்த அரசாணையை எதிர்த்து பட்டினம்பாக்கம் பகுதியை சுற்றி உள்ள மீனவ மக்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு அலைகள் எழுந்தன.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம், பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்தும், உடனடியாக அந்த உத்தரவை திரும்ப பெறவேண்டி வற்புறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கனவே இருக்கக்கூடிய தலைமை செயலகம் போதுமான இடவசதி இல்லாமல் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஏற்கனவே பல்வேறு ஆட்சியாளர்களால் இந்த தலைமை செயலகம் மாற்றப்பட வேண்டி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும்கூட அது மேற்கொள்ளப்பட்டதாக பெ. சண்முகம் குறிப்பிட்டார். டாக்டர். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் என்பது கட்டப்பட்டது. ஆனால், அது பின்னால் வந்த ஆட்சியாளர்களால் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது உள்ள தலைமை செயலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், அதற்காக தற்போது தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய இடம் என்பது கொஞ்சமும் பொருத்தமற்றதாக இருப்பதாக பெ. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இந்த பகுதி மிகுந்த பாதிப்பிற்குள்ளானது என்பது தற்போதைய முதலமைச்சருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை. ஆனால், அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள், நிவாரணம் வழங்கியிருக்கிறார்கள், வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் தலைமை செயலகத்தை கட்டுவது என்பது மிகவும் மோசமானது. எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அரசினுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாக பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
"ஒருவேளை இனிமேல் சுனாமி ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான புதிய தொழில் நுட்பம் எதையாவது இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா? என்பது தெரியவில்லை, அல்லது இனிமேல் சுனாமியே வராது என்ற முடிவிற்கு தமிழக அரசு வந்துவிட்டதா? என்ற கேள்வியையும் எழுப்ப விரும்புகிறேன்" என்று தன் கேள்விகளை முன்வைத்தார். ஆகவே கடற்கரைக்கு அருகே மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், குடியிருப்பையும் பாதிக்கக்கூடிய வகையில், இப்படி ஒரு யோசனையை சொன்ன அதிகாரிகள் யாராக இருந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல. "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று சொல்வார்கள்.
ஆகவே, தமிழக முதலமைச்சரை நான் கேட்க விரும்புவது, யார் இந்த யோசனையை கூறியிருந்தாலும், இது நிராகரிக்கக்கூடிய ஆலோசனை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வற்புறுத்த விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்ற பல தலைவர்கள் சொல்வதைபோல நிர்வாக நகரம் என்கிற பெயரில் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அந்த பக்கம் இந்த நிர்வாக நகரை மாற்றுவது என்ற யோசனையை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
மேலும் பேசிய அவர், சென்னை நகரத்திற்குள்ளேயே புதிய தலைமை செயலகத்தையும், புதிய சட்டப்பேரவையையும் அமைப்பதற்கான பல்வேறு இடங்கள் சென்னை மாநகருக்குள்ளேயே இருக்கிறது. தமிழ்நாடு அரசிற்கு இப்போது சொந்தமாக இருக்கக்கூடிய 'கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம்' ஏறத்தாழ 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒருவேளை இவர்கள் 4 சட்டமன்றம் கட்டுவது என்றாலும் அங்கு காட்டமுடியும். ஒருவேளை பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1000-மாக உயர்த்துவது என்ற யோசனை தவெக அரசிற்கு இருந்தால் அதை விட சிறந்த இடம் இருக்கமுடியாது. ஆகவே தற்போது அவர்கள் கண்டறிந்திருக்கக்கூடிய இடம் என்பது மிக மிக சிறிய இடம். வெறும் 25 ஏக்கர்தான் என்று தற்போதைய இடத்தினை குறித்து பெ. சண்முகம் பேசினார்.
அதேபோல தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம் இப்போது கிளம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையமும், அதை சுற்றியுள்ள இடமும் மிகப்பெரிய இடம். யாரையும் அப்புறப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே இப்படி மாற்று யோசனைகளை ஆராய்வதற்கு பதிலாக "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்கிற பெயரில் அவசர அவசரமாக அரசாணையை வெளியிட்டுள்ளது என்பது "யார் என்ன யோசனையை கூறினாலும் நாங்கள் கேட்கமாட்டோம்". "எவ்வளவு நியாயமான ஆலோசனையாக இருந்தாலும் ஏற்கமாட்டோம்" என்கிற அணுகு முறைத்தான் அது வெளிப்படுத்துகிறது என்று காட்டமாக தமிழக அரசினை விமர்சித்தார்.
ஆகவே இப்போது வெளியிட்டுள்ள அரசாணை 564-ஐ திரும்பபெறவேண்டும் என்றும் பட்டினம்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைக்கப்படாது என்கிற அறிவிப்பை முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இதுபோன்ற விஷயங்கள் என்பது அவர்களுடைய ஆட்சியின் சாதனை பட்டியலில் வரக்கூடியது அல்ல என்றும் மாறாக காலத்திற்கும், அடுத்தடுத்து வரக்கூடிய நூற்றாண்டிற்கும் தலைமை செயலகமும், சட்டமன்றமும் பொதுவான பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் பெ. சண்முகம் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டினை தெரிவித்தார்.
மேலும், உடனடியாக ஒரு அணைத்து கட்சி கூட்டத்தினை கூட்டவும், கட்சி தலைவர்களின் ஆலோசனையையும் கேளுங்கள் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டின் எல்லா தலைமை அலுவலகங்களும் சென்னையில் இருப்பதாகவும், தலைமை செயலகம், சட்டமன்றம் போன்றவற்றை சென்னைக்கு வெளியே கொண்டு செல்வது என்று சொன்னால் மற்ற தலைமை அலுவலகங்களை எல்லாம் என்ன செய்யப்போகிறார்கள்? என்கிற இயல்பான கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஏற்கனவே இந்த சாந்தோம் நெடுஞ்சாலை என்பது மிக மோசமான நெருக்கடி உள்ள சாலை. ஏராளமான பள்ளிகள் இருக்கிறது. ஏற்கனவே ஒரு போக்குவரத்து நெருக்கடியில் இருக்கக்கூடிய ஒரு பகுதி. இதுபோன்ற பகுதியில் தலைமை செயலகம் அமைத்து, அங்கு அன்றாட முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்து செல்வர்களானால் இங்கு அருகில் இருக்கும் மக்கள் யாரும் வாழ விரும்பமாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார். அதனால், பட்டினம்பாக்கம் என்பதை உடனடியாக ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி மற்ற கட்சியினரின் ஆலோசனையை கேட்கவேண்டும் என்றும் பொருத்தமான இடத்தை சென்னை மாநகருக்குள்ளேயே கண்டறிய வேண்டும் என்பது மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து என்று பெ. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்