தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் வரலாற்றில் முதல்முறையாக ரூ.13,000 கோடியைத்தாண்டி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் புதிய உச்சத்தை எட்டி சாதனை
இது இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.12,000 கோடியைவிட ரூ.1,000 கோடி அதிகமாகும். இந்த ஆண்டு இலக்கான ரூ.12,000 கோடியை விட 8.33 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் 21.03.2023 வரையில் 16,93,604 விவசாயிகளுக்கு ரூ.13,029.04 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையும் இந்த வருடம் புதிய உச்சத்தை எட்டி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.1,258.86 கோடி கடன்
டெல்டா மாவட்டங்களில் 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2,76,452 விவசாயிகளுக்கு ரூ. 1,792.51 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் இதுவரை வழங்கப்பட்டதில் அதிகபட்சமான எண்ணிக்கையும், தொகையும் ஆகும். புதிய உறுப்பினர்களாக 2,81,216 விவசாயிகள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 2,30,156 விவசாயிகளுக்கு ரூ.1,579.37 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் இதுவரை வழங்கப்பட்ட தொகையில் அதிகபட்சமானதாகும்.
கால்நடை பராமரிக்கும் விவசாயிகளுக்கும் கூட்டுறவுத்துறை வட்டியில்லாக் கடனை அளித்து வருகிறது. அந்த வகையில் 2,72,566 விவசாயிகளுக்கு ரூ.1,258.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம், விவசாயிகளுக்கு தமிழ்நாடு கூட்டுறவுத் துறை மூலம் ரூ.14,287.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் இந்த ஆண்டு இலக்கான ரூ.1,000 கோடியை விட 25.8 சதவீதம் அதிகமாகும்.