“சென்னையை நெருங்கிய முரசு புயல்” - இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. தீவிரக் கண்காணிப்பு பணியில் மாநகராட்சி!

100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும..
Cyclone Murasu Chennai
Cyclone Murasu Chennai
Published on: 
Updated on: 
2 min read

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல், இன்று(நவ 02) நள்ளிரவு ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னைக்கு அருகே தீவிரப் புயல்

அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் முரசு புயல் நிலைகொண்டுள்ளது. இது சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்குக் கிழக்கு - தென்கிழக்கே சுமார் 210 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், இன்று இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திர மாநிலம் நெல்லூர் - நரசாபூர் இடையே, ஓங்கோலை ஒட்டிய பகுதியில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புயல் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும் என்பதால், சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று காலையிலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை தொடங்கிய மழை, நள்ளிரவில் தீவிரமடைந்தது. குறிப்பாக, வடசென்னையின் முல்லைநகர், வியாசர்பாடி, பெரம்பூர், பாரிமுனை, ஆயிரம் விளக்கு, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மத்திய சென்னையில் அபிபுல்லா சாலை, தியாகராய நகர், துரைசாமி சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளிலும், தென்சென்னையில் வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக மழை பதிவாகியுள்ளது.

12 மணி நேரத்தில் 17.9 செ.மீ. மழை!

மாநகராட்சி அதிகாரி தெரிவித்த தகவலின்படி, 12 மணி நேரக் கணக்கீட்டில் முல்லைநகர் பகுதியில் சுமார் 17.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பிராட்வே பகுதியில் 13 செ.மீட்டருக்கும் அதிகமாகவும், மணலி பகுதியில் சுமார் 12.6 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற பல பகுதிகளில் 10 செ.மீட்டருக்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு மணி நேரத்தில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளிலும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

22 சுரங்கப்பாதைகளில் கண்காணிப்பு

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேங்குகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரம்பூர் சுரங்கப்பாதையில் சிறிய அளவில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற 21 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக நடைபெறுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழிகளில் தண்ணீர் சீராக வெளியேறுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக, 9-வது மண்டலத்துக்கு உட்பட்ட பேசன்ட் சாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நீர் வெளியேற்றத்தில் எந்தவித அடைப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000-க்கும் மேற்பட்டோர் களத்தில்

மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. துணை ஆணையர்கள், மூத்த அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்திலும் அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நாளை காலை 6 மணி முதல் பணியாற்றுவதற்காகத் தனிக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். ஒவ்வொரு மணி நேரமும் மழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த நிலவர அறிக்கைகள் முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை மற்றும் திருவள்ளூர் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காகப் பயணிப்போருக்கு இடையூறு ஏற்படாமல் போக்குவரத்தைச் சீராகப் பராமரிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

புயல் சென்னையை நேரடியாகத் தாக்க வாய்ப்பில்லை என்றாலும், அதன் தாக்கத்தால் பெய்யக்கூடிய கனமழை முக்கியச் சவாலாக உள்ளது. காற்றின் வேகம் சென்னையில் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டாலும், அதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.