

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் பாசன பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2865 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1040 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்துள்ள நிலையில் சோத்துப்பாறையில் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் கண்மாய்கள் மற்றும் குளங்கள் முழுமையாக நீர் நிரம்பாத நிலையில் தமிழக அரசு அணையில் இருந்து பாசனத்திற்கு முறைப்படி நீர் திறக்க இதுவரை அரசாணை வெளியிடவில்லை.
இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு சோத்துப்பாறை அணையில் இருந்து நீரை திறந்து விட்டுள்ளனர். மேலும் மலர்தூவி நீரை வரவேற்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் பரப்பி உள்ளனர்.
புதிய ஆயகட்டு பாசனத்திற்கு நீர் திறப்பதாக விவசாயிகளுக்கும் விவசாய சங்கத்தினருக்கும் எந்தவித முன் அறிவிப்பும் விடப்படாத நிலையில், தவெக நிர்வாகிகள் நீர் திறந்து விட்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பில்லாத செயல்பாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் நீர் திறப்பு குறித்து அரசாணை பெறப்படாமலும், பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவு இல்லாமலும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாசனத்திற்கு நீர் திறந்து விட்டது குறித்து, பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசன் இடம் கேட்டபோது சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கண்மாய் பாசன விவசாயிகள், புதிய ஆயகட்டு விவசாயிகள் என யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அனையில் இருந்து வெளியேறும் உபரி நீர் நாளையே நின்று விட்டால் இதுபோன்று எடுக்கப்படும் நீரும் நின்றுவிடும்.
இந்த நிலையில் தவெக கட்சி நிர்வாகிகள் நீரை திறந்து விட்டுள்ளது முறைப்படியான பாசனத்திற்கான நீர் திறப்பு இல்லை எனவும், தமிழக அரசிடம் அரசாணை பெற்ற பின் விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்தினருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்ட பின்பு பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தவெக-வினரின் இந்த செயலுக்கு பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் "சோத்துப்பாறை அணையிலிருந்து அரசின் உத்தரவு இல்லாமல், தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் அறிவுறுத்தலின் பேரில் தவெக நிர்வாகிகள் அணை நீரை திறந்து வைத்ததாகக் கூறப்படும் செய்தியானது அதிர்ச்சி அளிக்கிறது." எந்தவித ஒரு முன்னறிவிப்போ, அரசாணையோ இல்லாமல் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் எப்படி இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கும்? திடீரென அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் சூழலில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து எதிர்பாரா விபத்துகள் ஏற்படும் அபாயமும், விவசாயிகளுக்கும் மிகுந்த பாதிப்பினை உண்டாக்காதா?
இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை தமிழக அரசு உடனடியாக விசாரித்து, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். “ஆளுங்கட்சியினர் என்ற போர்வையில் மக்கள் பிரதிநிதி அல்லாதோர் அரசின் நிர்வாக நடைமுறைகளில் தலையிடுவதையும், அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசின் அரசாணை பெறாமல்.. பாசனத்திற்கு நீர் திறந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்து “மலர் தூவியது இருக்கட்டும்.. விசாயிகளுக்கு சொன்னிங்களா?” என நெட்டிசன்கள் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்