காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!!

மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து ....
empty alchohol bottle
empty alchohol bottle
Published on
Updated on
1 min read

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இதுசம்பந்தமான வழக்குகள்  நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, டாஸ்மாக் தரப்பில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், மாநிலத்தில் 15 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் பகுதி அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் திட்டத்தை அமல்படுத்த அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெற்றுக் கொள்வது தொடர்பாக உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், மூன்று நிறுவனங்கள் மட்டுமே ஒப்புக்கொண்டதாகவும், மற்ற நிறுவனங்கள் காலி பாட்டில்களை திரும்ப வாங்க மறுத்து விட்டதாகவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காலி பாட்டில்களை திரும்ப கொடுக்காததால் உள்ள தொகை வட்டியுடன் சேர்த்து 19 கோடி ரூபாயும், திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் 25 கோடி ரூபாயும் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திடக்கழிவு மேலாண்மைச் சட்ட விதிகளின்படி, பாட்டில்களை நிறுவனங்கள் பெற வேண்டும். அது அவர்களின் கடமை எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை வாங்க மறுத்த நிறுவனங்களுடன் மீண்டும் பேச்சு நடத்த உத்தரவிட்டனர்.

காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த வழங்கிய அவகாசம் ஏற்கனவே முடிவடைந்து விட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com