

இந்தியாவில் கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக திட்டமிட்டு வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது, பரப்பப்படுகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளூர் ஷாநவாஸ், “ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்திருக்கிறேன் என்று உங்களுக்கு கேள்வி எழும்பலாம் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் நமக்கு எந்த வேற்றுமையும் கிடையாது.
இந்தியா முழுவதும் நம்மை பிரிப்பதற்கு எப்படி ஒரு வகுப்புவாத சக்திகள் வேலை செய்கிறார்களோ அதே வேலை இன்றைக்கு தமிழ்நாட்டிலும் செய்ய பார்க்கிறார்கள். இந்து வேறு முஸ்லிம் வேறு கிறிஸ்தவர் வேறு என்றெல்லாம் ஒரு கருத்தை உந்த பார்க்கிறார்கள். அது எடுபடாது, வெற்றி பெறாது என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்ல வேண்டிய ஒரு நிலையில் நாம் இருக்கிறோம்.
அவர்கள் எத்தனையோ முயற்சிகளை எடுத்து நம்மை பிரிப்பதற்கு கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார்கள். அதனுடைய சாட்சியம் தான் திருப்பரங்குன்றம் சம்பவம், இது சமூக நல்லிணக்கத்திற்கான களம் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவக்கூடிய முயற்சி தான் இந்த நிகழ்ச்சி.
தமிழ்நாடு பிற மாநிலங்களை விட கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அனைத்திலும் முன்னேறி இருக்கிறோம். வளர்ச்சியை நோக்கி நாம் சிந்திக்கிறோம். சமூக நீதியின் அடிப்படையில் சிந்திக்கிறோம். அதனால் தான் நாம் முன்னேறி இருக்கிறோம், நம்மை 2000 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கக்கூடிய வேலை அவர்கள் செய்கிறார்கள் இதை அனுமதிக்க கூடாது”
இவரை தொடர்ந்து பேசிய, விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் எம்பி பேசுகையில், “இயேசுபிரான் 30 ஆண்டுகள் சாதாரண குடிமகனை போல குடும்பத்தோடு வாழ்ந்தார். அதிலும் சில ஆண்டுகள் எங்கே இருந்தார் என்று தெரியாது. அதன் பின்னர் தான் அவர் இறைத்தூதராக உடன் இருந்தவர்களால் அடையாளம் காணப்பட்டார்.
அவருடைய பணிகள் அன்றைய ஆட்சியாளர்களை உலுக்கியது. எளிய மக்களை ஈர்த்தது. அவருடைய சீடர்கள் அவருடைய கருத்துக்களை அவருடைய மறைவுக்கு பின்னர் உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தனர்,இந்தியாவுக்கு வந்தார்கள் அதிலும் குறிப்பாக சென்னைக்கு தோமையார் வந்தார் என்கிற வரலாற்று பதிவுகளை எல்லாம் நாம் பார்க்கிறோம். மோசஸ், ஜீசஸ், நபிகள் நாயகம் இந்த மூவரும் ஒரு தாய் மக்கள் என்று சொல்லக்கூடிய வகையிலே ஒரு வரலாற்று பாரம்பரியத்தை கொண்டு இருக்கிறார்கள்.
மனிதநேயம் தான் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு மனிதநேயம் இருக்கிற இடத்தில்தான் சகோதரத்துவம் இருக்கும், பைபிள் என்பது மானுடத்தை வழிநடத்தக் கூடிய ஒரு மகத்தான கோட்பாட்டை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது குரான் என்பதும் அப்படி சகோதரத்துவத்தை மேம்படுத்துகிற.ஒரு மாபெரும் கோட்பாட்டை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக திட்டமிட்டு வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது, பரப்பப்படுகிறது.பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் சரி தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் பைபிள்கள் கொளுத்தப்படுவதும் இவை எல்லாம் திட்டமிட்டு பரப்பப்படுகிற வெறுப்பு அரசியலின் விளைவுகள். அப்படி வெறுப்பை விதைக்கிற போது அதை நாம் எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்.
கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் சகோதரத்துவத்திற்கான கோட்பாடாக என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சகோதரத்துவத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும் அப்போதுதான் மானுடம் செழிக்கும்” என அவர் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.