

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் கரூர் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே விரிவாகத் தரப்பட்டுள்ளன.
வாக்காளர் விவரம் மற்றும் சமூகக் காரணிகள்:
கரூர் தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளைய தலைமுறை வாக்காளர்கள் 13.45% ஆக உள்ளனர். 2.59% முதல்முறை வாக்காளர்களுடன் இளைஞர்கள் இங்குத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். சமூக ரீதியாக, வேளாள கவுண்டர்கள் 38% ஆகவும், முத்தரையர் 10%, சோழிய வேளாளர்கள் 10%, தேவேந்திர குல வேளாளர்கள் 10% என உள்ளனர். மற்ற சமூகத்தினர் 24% உள்ளனர். இது ஒரு ஜவுளித் தொழில் சார்ந்த பெரிய நகர்ப்புறத் தொகுதியாகும்.
உள்ளூர் பிரச்சனைகள்:
நகரின் மையப்பகுதியில் உள்ள வடிகால்களில் கழிவுநீர் தேங்குவதால் ஏற்படும் கடும் கொசுத் தொல்லை கரூரின் சாபக்கேடாக உள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டம் இன்னும் முழுமையடையாமல் இருப்பது பெரும் சிக்கல். ஜவுளி நிறுவனங்களுக்கு வரும் லாரிகளால் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து முடக்கம் மற்றும் பார்க்கிங் வசதி இல்லாமை ஆகியவை மக்களின் அன்றாடக் கோரிக்கைகளாக உள்ளன. நூல் விலை உயர்வு ஜவுளித் தொழிலைப் பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
கரூர் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் முடிவுகள் ஒப்பீடு (2021 vs 2024):
2021-ல் திமுக 49.3% வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 47.2% ஆகச் சற்று குறைந்துள்ளது. அதிமுக 2021 மற்றும் 2024 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் 43% என்ற நிலையிலேயே உள்ளது. நாம் தமிழர் கட்சி 3.5%-லிருந்து 7.47% ஆகத் தனது வாக்குகளை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது.
2026 தேர்தல் கணிப்பு - பூத் லெவல் ஆய்வு:
2024-ல் திமுக 139 பூத்களில் வலுவாக உள்ளது. அதிமுக 89 பூத்களில் ஸ்ட்ராங்காக இருக்கிறது. வரும் 2026 தேர்தலில், திமுக 115 பூத்களிலும், அதிமுக 90 பூத்களிலும் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. சுமார் 60 பூத்கள் ஸ்விங் பூத்களாக இருப்பதால், இங்குப் போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும். கான்சிலிடிக்ஸ் கணிப்பின்படி, வரும் தேர்தலில் திமுக 37% வாக்குகளையும், அதிமுக 34% வாக்குகளையும் பெறும். இரு கட்சிகளுக்கும் இடையே வெறும் 3% மட்டுமே வித்தியாசம் இருக்கும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 24% வாக்குகளைப் பிரிக்கும். செந்தில் பாலாஜி அவர்கள் தொகுதி மாறி கோவைக்குச் செல்வது திமுகவிற்குப் பின்னடைவாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், தற்போதைய கணிப்பின்படி திமுகவே கரூரில் சிறிய முன்னிலையில் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.