“பாஜகவுடன் கைகோர்த்த திமுக..” - ‘இரட்டை துரோகம்’ என வன்னி அரசு சரமாரி அட்டாக்! கழகத்தின் முடிவென்னா?

திமுக தனது நிலைப்பாட்டை மாற்றியதற்கான காரணங்கள் என்ன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன
“பாஜகவுடன் கைகோர்த்த திமுக..” -  ‘இரட்டை துரோகம்’ என வன்னி அரசு சரமாரி அட்டாக்! கழகத்தின் முடிவென்னா?
Published on: 
Updated on: 
2 min read

இந்திய அரசியலில் மீண்டும் தொகுதி மறுவரையறை விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்தப்பட்ட மசோதாவைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தேசிய அரசியலில் மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூடவுள்ளன. டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் நிறைவேறாமல் போனது.

இதற்கிடையே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரித்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. குறிப்பாக திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி மறுவரையறை தொடர்பாகத் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தன.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவின் புதிய வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மசோதாவின் புதிய வரைவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வந்த திமுக தற்போது ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. புதிய வரைவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன, திமுக தனது நிலைப்பாட்டை மாற்றியதற்கான காரணங்கள் என்ன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், "திமுக-வின் ஆதரவு நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து" என்று தெரிவித்துள்ளார். அதனையடுத்து விசிக அமைச்சர் வன்னி அரசு இந்த ஆதரவை “திமுகவின் இரட்டை துரோகம்!” என்று குறிப்பிட்டு சாடியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பித்தாவது, தமிழ்நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 17,2026  அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தொகுதி திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

பெரும்பான்மைக்கு 352 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், 298 உறுப்பினர்களே ஆதரவளித்து வாக்களித்ததால் 131 வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. எதிர்த்து வாக்களித்ததில் திமுக பங்கு முக்கியமானது. இந்த மசோதா வருவதற்கு முன்பாகவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்றைய திமுக அரசு கடந்த 14 பிப்ரவரி 2024 அன்று கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாசித்தார்.

இந்தியாவிலேயே பாஜகவின் சதிக்கோட்பாட்டை முதலில் அம்பலப்படுத்திய தீர்மானமாக அது அமைந்தது. சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன.. பாஜகவை தவிர. ஆனால், இன்று பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமாகும்.

காலமுழுக்க மாநில உரிமை பேசிய இயக்கம் திமுக. இப்போது மாநில உரிமைகளுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டது. அது மட்டுமல்ல, திருப்பரங்குன்றம் வழக்கில் மாநில உரிமையை அச்சுறுத்துகின்ற வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இதற்கு பின்னால் சனாதன சங்கிகள் இருப்பது வெளிப்படையானது. திருப்பரங்குன்றத்தில் ஆகமவிதிப்படியே தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான். கோவில் மரபு.முருக பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும்  இதையே கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்தனர்.

அந்த நிலைப்பாட்டையே இப்போது தவெக அரசு எடுத்தது. மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மிகச்சிறப்பாக சங்கிகளை கையாண்டார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஆனால், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எடுக்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக எடுத்து CRPF படையை அனுப்பியுள்ளது பாஜக அரசு. இந்த வழக்கை பொறுத்தவரை மிகத்துணிச்சலாக கையாண்டது தவெக அரசு. இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால். கடந்த திமுக அரசை விட தவெக அரசு மிக சிறப்பாகவும் பொறுப்பாகவும் கையாண்டது.

உண்மை இப்படி இருக்க திருப்பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக திமுக எந்த போராட்டமும் நடத்தாமல் கள்ள மவுனம் காத்து வருகிறது. மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான திமுக இப்படி கள்ளத்தனமாக பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் ‘முதுகுத்தியாக’ மாறுவதை தமிழர்களும்  மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா? திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை- இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.

இவ்வாறு தொகுதி மறுவரையறை மற்றும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் என இரண்டு முக்கிய அரசியல் பிரச்சினைகளையும் முன்வைத்து திமுகவை வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்துள்ள புதிய நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக தரப்பிலிருந்து எழுந்துள்ள இந்த விமர்சனம் கூட்டணிக்குள் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு திமுக தலைமை என்ன பதிலளிக்கப் போகிறது? திமுக – விசிக இடையேயான இந்த கருத்து மோதல் அடுத்தகட்டத்தில் கூட்டணி உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.