2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 32 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது.
73 இடங்களை மட்டுமே பெற்ற திமுக கூட்டணிக்கு இது படுதோல்வியாகப் பார்க்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 164 தொகுதிகளில் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
அதாவது, 61 விழுக்காடு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் மறுக்க முடியாத உண்மை.
திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட, அந்தக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட பல தொகுதிகளிலும் திமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தத் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கட்சியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
அரசியல் நோக்கர்கள் பலரும், திமுக நீண்டகாலமாகத் தனது குறைகளைக் களையத் தவறியதே இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய 36 முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் 476 பக்க அறிக்கை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 22, 2026 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாக, தற்போது 77 ஆக இருக்கும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், ஒரு மாவட்டச் செயலாளரின் கீழ் தற்போது 5–6 தொகுதிகள் இருக்கும் நிலை மாறி, 2–3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், திமுக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் மண்டலம், மதுரை உள்ளிட்ட வட தமிழகத்தின் சில பகுதிகளிலும், கொங்கு மண்டலத்திலும், தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மோசமாகச் செயல்பட்டிருக்கிறது.
மோசமாகச் செயல்பட்டுள்ள பகுதிகளில் மாவட்டச் செயலாளர்களை மாற்றவும் திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவியே அதிக அதிகாரம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பதவியில் பல ஆண்டுகளாக இருந்துகொண்டு, கட்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாதவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளை வழங்கி ஒதுக்கிவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்கின்றனர்.
மேலும், பிற கட்சிகளில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த தலைவர்களுக்கு உரிய பதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கட்சிக்கு புத்துணர்வு அளிக்கும் என்ற நம்பிக்கையில் திமுக தலைமை இருப்பதாகத் தெரிகிறது.
இதனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் அதிகாரமிக்க பதவிக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
நிர்வாக ரீதியான மாற்றங்களுக்குப் பிறகு, களத்தில் கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து திமுக அதன் வேர்களை புதுப்பிக்கத் தொடங்கியிருக்கிறது. தங்களது கட்சியின் பலத்தை நிரூபிக்க அதுவே ஒரே வாய்ப்பாக கருதுகிறது. அதை நோக்கிய கூட்டமாகவே வருகின்ற செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே புதிய பதவிகளை நோக்கி காய் நகர்த்த தொடங்கிவிட்டனர் லோக்கல் தலைவர்கள். எதுவானாலும் கட்சியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சரி என்பதே தொண்டர்களின் மனநிலையாக இருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்