தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் விஜய்யை திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், சிறைச்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், விஜய்யின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தேனி மாவட்டத்தில் சிறைச்சாலையில் இருந்து 17 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, முதல்வர் விஜய் ஆய்வு செய்த அடுத்த மாதமே புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியதாக குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவம் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும், அப்போது 55 எல்டிடிஇ தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாகவும் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் இதுபோன்ற பெரிய சம்பவம் நடைபெற்றதாகவும், அதன்பிறகு திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது மீண்டும் இதுபோன்ற பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளதாக விமர்சித்தார்.
தேனி சிறைச்சாலையில் காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பியோடியதாகக் குறிப்பிட்ட பரந்தாமன், இந்த ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், “முதலமைச்சராகச் சிறைக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா? இல்லையென்றால், ஜோதிடரின் பரிகாரத்தைச் செய்வதற்காகச் சிறைச்சாலைக்குள் சென்று வந்தீர்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து முதல்வர் விஜய்யை விமர்சித்த அவர், “சினிமாவில் ஹீரோ சார் நீங்கள்; நடைமுறையில் நீங்கள் ஜீரோவாகத்தான் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு முதலமைச்சர் ஏன் மௌனமாக இருக்கிறார்? நீங்கள் கரூர் சம்பவத்தின்போது ஓடியதைப் போலத்தான் உங்கள் ஆட்சியில் உள்ள சிறைக் கைதிகளும் இருக்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்