

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ரயில் கட்டண உயர்வு, த.வெ.க-வின் நிலைப்பாடு, திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் செவிலியர் போராட்டம் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துக்களைத் தெரிவித்தார்.
த.வெ.க 'தூய சக்தியா'?
தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களை "தூய சக்தி" என்று கூறிக்கொள்வது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "மற்ற கட்சியைப் பற்றி அவர்கள் கருத்தைச் சொல்கிறார்கள். அவர்கள் தூய சக்தியா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஏற்கனவே இதுகுறித்து எங்கள் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மிக அழகாக விளக்கம் கொடுத்துவிட்டார். அது பத்திரிகைகளிலும் வந்துவிட்டது, அதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்" என்று சூசகமாகப் பதிலளித்தார்.
திமுக தேர்தல் அறிக்கை ஒரு 'நாடகம்':
திமுக எம்.பி கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய அவர், "கடந்த முறையும் இதேபோல ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டு ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம் என்று 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆனால், அதில் எதை நிறைவேற்றினார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என அவர் பட்டியலிட்டவை:
100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது மற்றும் ஊதிய உயர்வு.
கல்விக் கடன் தள்ளுபடி.
மாதம் தோறும் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்.
ரேஷன் கடையில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை.
டீசல் விலை குறைப்பு (பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாகச் சொல்லி ரூ.3 மட்டுமே குறைத்தனர்).
"மொத்தத்தில் 525 அறிவிப்புகளில் கால்வாசி கூட நிறைவேற்றப்படவில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்த ஒரே அரசாங்கம் திமுக தான். இப்போது மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்" என்று கடுமையாகச் சாடினார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
செவிலியர் போராட்டம் & காலிப் பணியிடங்கள்:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்தால் 3.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்களையும், 2 லட்சம் அரசு சார்ந்த பணியிடங்களையும் நிரப்புவோம் என்று சொன்னார்கள். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 75,000 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த இடங்களைக்கூட நிரப்பவில்லை. செவிலியர்கள் விவகாரத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களைப் பணி நிரந்தரம் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த அரசு வேண்டும் என்றே அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
ரயில் கட்டண உயர்வு
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்துக் கவலை தெரிவித்த அவர், "விலைவாசி உயர்வு, எரிபொருள் உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டினாலும், சாமானிய மக்கள் பாதிக்காத வகையில் மத்திய அரசு இந்த உயர்வைப் பரிசீலித்துக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்