2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 3 ஆம் கட்டமாக சில தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆளுங்கட்சியின் வரி உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் மேலும் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000 வழங்கப்படும் எனவும் அதிரடியாக அளித்துள்ளார்.
வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இதனை சரி செய்யும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 8,000 நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும். நகரப் பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்தார்.
வருவாயை பெருக்கி நங்கள் அறிவித்த நலத்திட்டங்களை முழுமையாக நிறைவோற்றோம் எனவும் குறிப்பிட்டார். அதனையடுத்து செய்தியாளர் ஒருவர், ''வருவாய் உயர்த்துவது என்றால் வரியை உயர்த்தப் போகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதனை தற்போது சொல்ல முடியாது. வரியை உயர்த்துவதில் பல்வேறு வழிகள் இருக்கின்றது. அதனை நிதித்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மூலமாக ஆய்வு செய்து எந்தெந்த வகையில் வரியை உயர்த்த முடியுமோ அவ்வாறு உயர்த்தி, நிதியைப் பெற்று அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.