“தவெக கூட்டணியை தடுத்தது ஈபிஎஸ்!” – அதிமுக தோல்விக்கு எடப்பாடியே காரணமென சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

இது சாதாரண தோல்வி அல்ல; கட்சியின் வாக்கு வங்கி சரிந்து கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை
cv shanmugam
Published on
Updated on
2 min read

தமிழக அரசியலில் அதிமுகவின் உள்கட்சி மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்துள்ளது. சி வி சண்முகம், எடப்பாடி பழனிசாமி தலைமையை கடுமையாக விமர்சித்து பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ராயப்பேட்டையில் தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தொடர்ந்து சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளுக்கு தற்போதைய தலைமையே காரணம் என குற்றம்சாட்டினார்.

2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாக கூறிய சி.வி.சண்முகம், “இது சாதாரண தோல்வி அல்ல; கட்சியின் வாக்கு வங்கி சரிந்து கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை” என்றார். இந்த தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி செவிகொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், “பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் மற்றும் அதிமுகவில் அதிருப்தியுடன் இருந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஆனால் அதை இபிஎஸ் நிராகரித்தார்” என கூறினார். குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சிக்குள் பலரும் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்தக் கட்சி தரப்பிலிருந்தும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் சி.வி.சண்முகம் கூறினார். ஆனால், கூட்டணி அமையக்கூடாது என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதாகவும், பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை உதாசீனப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதேபோல், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையும் அரவணைக்காமல் வெளியேற்றியதாகவும், “நான் மட்டும் இருந்தால் போதும்” என்ற எண்ணத்தில்தான் இபிஎஸ் செயல்பட்டதாகவும் விமர்சித்தார்.

ஓ. பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுகவில் சாதாரண உறுப்பினராக கூட சேர தயாராக இருந்ததாகவும், அதற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். “இப்போது மட்டும் பேசிக் கொள்ளலாம் என்று கூறுவது நாடகம். இதையே முன்பே செய்திருந்தால் அதிமுக இந்த நிலைக்கு வந்திருக்காது” என்றார். அதே நேரத்தில், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என சி.வி.சண்முகம் வலியுறுத்தினார். “பொதுக்குழுவில் எடுக்கப்படும் எந்த முடிவையும் தலைவணங்கி ஏற்றுக்கொள்வோம். பேச தயாராக இருக்கிறோம். ஆனால் முதலில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்றார்.

மேலும், கட்சியில் இருந்து மாவட்ட மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நீக்கப்படுவது சட்டபூர்வமற்றது என்றும், ஆதரவு தராத நிர்வாகிகளை மிரட்டி பதவி பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுவரை 31 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், “தொண்டர்களை அச்சுறுத்தி கட்சியை நடத்த முடியாது” என எச்சரித்தார். சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி அதிருப்தியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதோடு, வரும் நாட்களில் கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com