
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியதோடு, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவவிருக்கும் தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) மையம் குறித்த திட்டங்களையும் விளக்கி அதற்கான பணிகளும் துவங்கிவிட்டது. இந்த மையம் கூகுளின் அமெரிக்காவுக்கு வெளியே அமையவிருக்கும் மிகப்பெரிய AI மையமாக இருக்கும் என்பது மற்றொரு சிறப்பம்சம்.
கூகுள் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் $15 பில்லியன் (சுமார் ₹1.25 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளது. இது கூகுள் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடாகும்.
இந்த முதலீடு குறித்து கூகுள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இது இந்திய அரசாங்கத்தின் 'விக்சித் பாரத் 2047' (Viksit Bharat 2047) இலக்குடன் ஒத்துப்போகிறது என்றும், AI மூலம் இயக்கப்படும் சேவைகளை விரைவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த முயற்சி, AI திறன்களில் ஒரு தலைமுறைக்கான மாற்றத்தைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கணிசமான பொருளாதார மற்றும் சமூக வாய்ப்புகளை உருவாக்குகிறது," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்த அதிகாரபூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஷ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் தமிழ்நாடு ஏற்கனவே கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் ஆனால் அவை அனைத்தும் கண்துடைப்பு எனவும் எதிர்கட்சியான அதிமுக தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்த பதிவில், “முதலீடு ஈர்ப்பதாக சொல்லி, பொம்மை முதல்வர் அமெரிக்காவிற்கு இன்பச் சுற்றுலா சென்றபோது, கூகுள் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக போட்டோ சூட் நடத்தி அறிவிப்பு வெளியிட்டு ஓர் ஆண்டு கடந்த நிலையில் தற்போது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம், விசாகப்பட்டினத்தில் 1.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு, அம்மாநில முதல்வரோடு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
அப்படியானால், பொம்மை முதலமைச்சர் கையெழுத்திட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தொழில்துறை அமைச்சர் காட்டிய வெற்றுக் காகிதத்தைப் போல், இதுவும் ஓர் வெற்றுக் காகிதம் தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது” என விமர்சித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.