கீழ்பவானி வாய்க்காலை மண்ணால் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!

கீழ்பவானி வாய்க்காலை மண்ணால் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!
Published on
Updated on
2 min read

கீழ்பவானி வாய்க்காலை சீரமைப்பதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் அறிக்கையை வன்மையாக எதிர்ப்பதாகவும், மண்ணை கொண்டு வாய்க்காலை சீரமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1948 ஆண்டில் 124 மைல் நீளத்திற்கு மண்ணால் கீழ் பவானி வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலம்பாசன வசதி பெறுகிறது.

தற்போது ஆங்காங்கே பழுது ஏற்பட்டு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ்பவானி பாசன கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்து சீர் செய்தால் நிலத்தடி நீர்மட்டம் கசிவு நீர் வெளியேறுவது முற்றிலும் தடைபடும் எனக் கூறி ஒரு தரப்பினரும் கடைமடை விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இதனையொட்டி கீழ்பவானி ஆயக்கட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த மே 1 இல் சீரமைக்கும் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 30.5.23 அன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதில் கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் எனவும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை செந்தூர் மஹாலில் அச்சங்கத்தின் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், வாய்க்காலை சீரமைப்பதில் அமைச்சர் துரைமுருகன் அறிக்கையை வன்மையாக எதிர்க்கிறோம். முழுவதும் மண்ணை கொண்டு கட்டப்பட்ட வாய்க்காலை சீரமைக்க மீண்டும் மண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் "பொதுமக்களுடைய கருத்துக்கேற்பின் அடிப்படையில் திட்டம் அமல்படுத்தப்படும்" என தெரிவித்து இருந்தார். தற்போது அமைச்சர் முத்துசாமியின் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் வாயிலாக 95 சதவீத விவசாயிகள் திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

மேலும், முதல்வர் அரசாணை எண் 276 இல் மாற்றம் செய்து பழமையான வாய்க்காலை மண்ணைக் கொண்டே சீரமைக்க வேண்டும் எனவும், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பாசன விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் எச்சரித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com