விளைநிலங்கள் தண்ணீரில்...விவசாயிகள் கண்ணீரில்...தமிழக அரசுக்கு கோரிக்கை!

விளைநிலங்கள் தண்ணீரில்...விவசாயிகள் கண்ணீரில்...தமிழக அரசுக்கு கோரிக்கை!
Published on
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர். 

வீடுகள் மற்றும் விளைநிலங்களை சூழ்ந்த மழைநீர்:

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி இடியுடன் கூடிய கன மழை கொட்டியது. இதனால் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் என அனைத்து பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்தது. வீடுகளை 2 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன், கழிவு நீரும் கலந்துள்ளதால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் பொதுமக்கள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். 

விவசாயிகள் கோரிக்கை:

இதேபோல், சீர்காழியை அடுத்த உமையாள் பதி, பச்சை பெருமாள் நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. தண்ணீர் வடிவதற்கு வழியில்லாதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொட்டித் தீர்த்த கனமழையால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.  ஓங்கூர் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆவணிப்பூர், ராயநல்லூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே, தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமன தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com