

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ₹258 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது மத்திய வருவாய் புலனாய்வு துறை (DRI). குறிப்பாக, சர்வதேச அளவிலான போதை பொருள் கடத்தல் நெட்ஒர்க்கை முறியடிக்கும் வகையில் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசின் DRI. கடந்த அக்டோபர் மாதம் 16 மற்றும் 17ம் தேதி நாகையில் மத்திய அரசின் DRI நடத்திய ரெய்டில் ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி சுகன் (27) என்பவரது வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் திருச்சி மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், DRI அதிகாரிகள் சுகனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு, உயர்ரக போதைப்பொருளான 135 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
நவம்பர் 9ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு நாட்டிலிருந்து பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அபுதாபியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜீப் இப்ராம்ஷா (42) என்ற பயணியை DRI அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அவரிடம் சோதனை நடத்தியதில், மறைத்து வைக்கப்பட்ட பார்சலில் சுத்தமான 24 கேரட் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 1.60 கிலோ 24 கேரட் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு, ரூ.2.30 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை வடமாநில கடத்தல் பயணி, ராஜீப் இப்ராம் ஷாவை கைது செய்த, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர்.
மேலும் அதே நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை சென்னை துறைமுகத்தில் DRI நடத்திய ரெய்டில் ரூ.7.72 கோடி மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் 12.87 டன் செம்மரக்கட்டைகளை மத்திய அரசின் DRI அதிகாரிகள் மீட்டுள்ளனர். 13,000 கிலோ செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 12ம் தேதி ராமநாதபுரம் மண்டபத்தில் DRI நடத்திய ரெய்டில் ரூ.10 கோடி மதிப்பிலான 17.74 கிலோ தங்கம் பறிமுதல்.
அக்டோபர் 26 அன்று, திருச்சி வான்வழிப் புலனாய்வுப் பிரிவுடன் (AIU) இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் - DRI நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், திருச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக 45 உயிருள்ள ஊர்வனவற்றை இந்தியாவிற்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஊர்வனவற்றில் 23 சோளப் பாம்புகள், 16 பந்து மலைப்பாம்புகள், 5 அர்ஜென்டினா கருப்பு வெள்ளை டெகுக்கள் மற்றும் 1 பனி வெள்ளை உடும்பு ஆகியவை அடங்கும்.
நவம்பர் 19 அன்று சென்னை மாதவரம் பகுதியில் வாகன சோதனையின் போது, 71.24 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த இரண்டு பேரையும் DRI அதிகாரிகள் கைது செய்தனர். 69 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 71.24 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருளை, சென்னை மற்றும் திருச்சி வழியாகக் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை ஒரே நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஹெராயின் போதைப்பொருள் இதுவாகும்.
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை கீரனூரில் ரூ.1 கோடி மதிப்பிலான 1.75 கிலோ தங்கத்தை காரில் கடத்திய நிலையில் DRI அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாகப் படகு மூலம் மண்டபத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்தத் தொடர் பறிமுதல் நடவடிக்கைகள் தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் தங்கக் கடத்தல் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ஒரே மாதத்தில் ரூ.258 கோடிக்கும் அதிகமான கடத்தல் பொருட்களை மத்திய அரசின் DRI அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. சர்வதேச கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறதா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் ஏற்கெனவே பல்வேறு விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகின்றது. இத்தகைய சூழலில், மத்திய புலனாய்வு அமைப்பான DRI தொடர்ந்து அதிரடி சோதனைகளை நடத்தி கடத்தல் சம்பவங்களை முறியடித்து வரும் நிலையில், தமிழக காவல்துறையின் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி எழுகிறது. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? இதுவரை எத்தனை கடத்தல் கும்பல்கள் பிடிபட்டுள்ளன? DRI பறிமுதல் நடவடிக்கைகளைத் தாண்டி மாநில காவல்துறையின் செயல்பாடு என்ன? என்பதற்கு தமிழக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்