நாளை பதவி ஏற்க போகும் இந்த புதிய ஆளுநர் யார்?.. அவரின் அரசியல் பின்னணி என்ன?

தற்போதைய கேரள அரசுடன் அர்லேகருக்கு சில மோதல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது...
நாளை பதவி ஏற்க போகும் இந்த  புதிய ஆளுநர் யார்?.. அவரின் அரசியல் பின்னணி என்ன?
Published on
Updated on
2 min read

கேரள மாநில ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தற்போது கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த புதிய ஆளுநர்? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஜனவரி 2, 2025 அன்று கேரளாவின் 23வது ஆளுநராகப் பதவியேற்றார். இவர் ஏப்ரல் 23, 1954 அன்று கோவாவின் பனாஜியில் பிறந்தார். இவர் மறைந்த விஸ்வநாத் அர்லேகர் மற்றும் மறைந்த திருமதி திலோமட்டமா அர்லேகர் ஆகியோரின் மகனாவார். கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ள செயிண்ட் ஜோசப் நிறுவனத்தில் தனது படிப்பை முடித்துள்ளார். மேலும் வாஸ்கோடகாமாவில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் வணிகப் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரது குழந்தைப் பருவத்தில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) அவர் கொண்டிருந்த தொடர்பு மூலமாகவும், அதன் பின்னர் 1989 முதல் பாரதிய ஜனதா கட்சியில் தீவிர உறுப்பினராக ஈடுபட்டதன் மூலமாக பொது சேவையிலேயே இவரது ஆரம்பகாலம் அமைந்தது. இவர் கோவா பாஜகவின் மாநிலத் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். எமர்ஜென்சி காலத்தின் போது (1975–1977) சிறைவாசமும் சென்றுள்ளார்.

கோவாவிலும் இவரது அரசியல் வாழ்க்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1970களில் ஆர்.எஸ்.எஸ். மூலம் அரசியலுக்கு நுழைந்து, பாஜகவின் முக்கிய தொண்டனாக இருந்தார். 1999ல் கோவா சட்டமன்றத் தேர்தலில் போர்வோரிம் தொகுதியில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார். மேலும் 2017-2019 வரை கோவா சட்டமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார். அங்கு சட்டமன்றத்தை சுமூகமாக நடத்தி, அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்தார். கோவா சட்டமன்ற உறுப்பினராக அர்லேகரின் பதவிக்காலம் 2002–2007 வரை இருந்தது. 2012 முதல் 2017 வரை, கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்தார். கோவாவில் வனம் & சுற்றுச்சூழல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

அர்லேகர் 2021ல் இமாச்சலப் பிரதேசத்தின் 21வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2023 வரை இமாச்சலத்தில் ஆளுநராக பதவி வகித்தார். பிப்ரவரி 2023 இல், இவர் பீகாரின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவர் ஆளுநர் பதவிக் காலத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மேலும் மாணவர்களுக்கான டிஜிட்டல் பாடத் திட்டத்தை ஊக்கப்படுத்தி இருக்கிறார். பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாநில அளவிலான மாநாடுகளை நடத்தி, விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களுக்கான நிதி உதவி திட்டங்களை விரிவாக்க உதவியிருக்கிறார்.

தற்போது கேரளத்தில் ஆளுநராக பதவி வகிக்கும் இவர் மீது சில விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளது. மத்திய வரி வருவாயில் மாநிலத்திற்குச் சேர வேண்டிய பங்கை மறுத்ததற்காக மத்திய அரசை விமர்சித்த வாக்கியங்களை ஆளுநர் நீக்கிவிட்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் கொள்கை உரை ஆற்றினார் என்ற சர்ச்சை கிளம்பியது. தற்போதைய கேரள அரசுடன் அர்லேகருக்கு சில மோதல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இவர் தமிழகத்திற்கு ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்கவிருக்கிறார். இவருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி தர்மாதிகாரி நாளை பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

ஆனால் ஒரே ஆளுநர் இரண்டு மாநிலங்களையும் மேற்பார்வை செய்பவராக இருக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால் சட்டம் அதற்கு அனுமதிக்கிறது. அதாவது, 1956-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது சட்டத்திருத்தத்தின் (பிரிவு 153)படி, ஒரே நபர் இரண்டு மாநிலங்களை மேற்பார்வையிட அனுமதிக்கிறது. அவ்வாறு நியமிக்கப்படும்போது, அந்த ஆளுநரின் ஊதியம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com