

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்தே பஞ்சாயத்துதான். மேலும் எடப்பாடி உள்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கததால்தான் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கழன்று விட்டனர். அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த செங்கோட்டையனின் நீக்கம். ஏற்கனவே இருவருக்கும் முரண்கள் இருந்தாலும், ‘பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். உடனே செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனும், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் இது எடப்பாடிக்கு மிகவும், பின்னடைவாக கருதப்பட்டது.
ஓபிஎஸ் பயணம்!
அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை. ஆனால் ஓபிஎஸ் -ம் மனக்கசப்பு காரணமாக பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். ஆனால் அதற்கப்புறம் அவர் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணியில் விலகிய அன்றே முதல்வர் ஸ்டாலினை அடையாற்றில் உள்ள முதல்வர் இல்லத்திலேயே சென்று சந்தித்தார். சந்தித்துவிட்டு வந்த பிறகு, ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை’ என பேசியிருந்தார்.
இந்த பின்னணியில்தான் ஓபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் “அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை கழகமாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன். பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தேன். தொண்டர்களின் எண்ணத்தையும் அமித்ஷாவிடம் கூறினேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதையே அமித்ஷாவுடன் வலியுறுத்தினேன். எம்ஜிஆர் தொண்டர்களின் இயக்கமான அதிமுக எப்போதும் பிளவுபடாது. ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதேபோல் தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவில்லை. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் அவருடன் பேசவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக ஒன்றிணைய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் சில நாட்களுக்கு முன் கூறிஇருந்தார்.”
இந்த சூழலில்தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தாற்காலிக அவை தலைவராக கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடிக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஓபிஎஸ் -க்கு ஆபத்தாக அமைந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடியை விமர்சிக்காமல் இருந்த, டிடிவிக்கும் ஏமாற்றம் தான் என்று சொல்லப்படுகிறது. இனி நிச்சயம் எடப்பாடி ஒருபோதும் ஓபிஎஸ் -ஐ கட்சிக்குள் சேர்க்க மாட்டார் என்று சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.