ஆந்திர அமைச்சரின் "அந்த ஒரு பதிவு".. உண்மையில் கசிந்ததா தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியங்கள்? - மீண்டும் பேசுபொருளான Guidance TN விவகாரம்!

பணியிலிருந்து விலகிய உடனேயே ஆந்திர அரசுப் பணியில் இணைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பின...
Guidance Tamil Nadu Controversy
Guidance Tamil Nadu Controversy
Published on: 
Updated on: 
2 min read

தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்திற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திர அரசுக்குக் கசிந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு கட்டங்களாக இந்தப் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் இதுவரை மொத்தம் 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பிரீஜா பிரசாத், கிறிஸ்டோ லாரல் பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேர் ஆந்திர அரசுடன் இணைந்திருப்பதைத் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான முக்கியத் தகவல்களை அணுகக்கூடிய பொறுப்புகளில் இருந்தவர்கள், பணியிலிருந்து விலகிய உடனேயே ஆந்திர அரசுப் பணியில் இணைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பின.

இதற்கிடையில் தமிழகத்தில் பணியாற்றிய காலத்திலேயே இவர்கள் ஆந்திர அரசுடன் தொடர்பில் இருந்தார்களா என்று சந்தேகம் இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான தரவுகள் மற்றும் ரகசியத் தகவல்களை அணுகும் வாய்ப்பு இவர்களுக்கு இருந்ததால், அந்தத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இருப்பினும், தகவல் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே, கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு நேற்று(நவ 19) விளக்கம் அளித்திருந்தது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், "ஊடகச் செய்திகளுக்கு மாறாக, ஜூலை 2026-இல் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து கூண்டோடு ராஜினாமா எதுவும் நடைபெறவில்லை. பணியாளர்கள் விலகுவது என்பது எந்தவொரு நிறுவனத்திலும் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்வாகும். கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில், சிறந்த பணி வாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம் மற்றும் தனிப்பட்ட அல்லது குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகப் பணியாளர்கள் விலகுகின்றனர்.

வேறு இடங்களில் வாய்ப்புகளைத் தேடிச் செல்வோர் உட்பட, தனது பணியாளர்களின் தொழில்முறை விருப்பங்களை கைடன்ஸ் தமிழ்நாடு எப்போதும் மதித்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு எப்போதும் தனது அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியைப் பராமரித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விருப்பமான முதலீட்டு இடமாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த விளக்கம் ஒருபுறம் வெளியாகியுள்ள நிலையில், கைடன்ஸ் தமிழ்நாட்டில் பணியாற்றிய 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் ஆந்திர அரசுப் பணியில் இணைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் மற்றும் தொழில் முதலீட்டுத் துறையில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தான் ஆந்திர மனிதவள மேம்பட்டு அமைச்சரான ‘நாரா லோகேஷ்’ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு மீண்டும் தமிழ்நாடு அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் “முக்கியச் செய்தி: ஆந்திரப் பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துவிட்டது. அதுதான்: ‘முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பது’ தாராளமாக இதைப் பின்பற்றுங்கள்!” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த சில அரசியல் விமர்சகர்கள் கைடன்ஸ் தமிழ்நாடு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை தான் அமைச்சர் மறைமுகமாக விமர்சிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.