

தண்டனைக் குறைப்பு, முன்கூட்டி விடுதலை கோரி கைதிகள் அளித்த விண்ணப்பங்கள் எத்தனை நிலுவையில் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான மாநில அரசுகளின் கொள்கைகளை கண்காணிப்பது தொடர்பாக, தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்கூட்டி விடுதலை குறித்த அரசின் கொள்கைகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களை தாமாக முன் வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.
பின்னர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எத்தனை கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்?
எத்தனை கைதிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன?
முன்கூட்டி விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து எத்தனை கைதிகளுக்கு எதிராக அறிக்கை உள்ளது?
முன்கூட்டி விடுதலை கோரி எத்தனை கைதிகளின் அளித்த விண்ணப்பங்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன?
மாநில அளவிலான குழுவில் எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.