

டித்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகில் நிலைகொண்டுள்ள நிலையில் இன்று காலை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று மாலை நான்கு மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது நாளை வரையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றே புயல் வலுவிழந்து மழை நின்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நாளை வரையிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கியதால் மாணவர்கள் மழையில் சிரமப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற நிலையில் தற்போது நாளையும் கனமழை தொடரும் என்ற காரணத்தால் நாளை ஒருநாள் மட்டும் சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளையும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சென்னையில் மழை விட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. கனமழை காரணமாக நாளை காஞ்சிபுரத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளையும் கனமழை தொடரவுள்ள நிலையில் துணை முதலமைச்சர் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் எல்.ஈ.டி கண்காணிப்பு திரைகள் மூலம் வெவ்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுகிறதா என்று சுரங்கப்பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் “1913” என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை தானே கேட்டறிந்தும் சமூக வளைதளங்களில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து கணினியில் பார்வையிட்டும், இதுவரை வந்த புகார்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.