சதுரங்க வேட்டையா? சரித்திர சாதனையா? தமிழகத் தேர்தல் வரலாற்றில் மெகா ரெக்கார்டு! 89% தாண்டிய கரூர்.. சென்னையில் ஆர்.கே.நகர் மாஸ்!

தமிழகத்தில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குப்பதிவே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்தச் சாதனை தகர்க்கப்பட்டு புதிய வரலாறு
tamilnadu election
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்தியுள்ளது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம், மாலை வரை குறையாமல் நீடித்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் சராசரியாக 82 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாகத் தமிழகத்தில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குப்பதிவே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்தச் சாதனை தகர்க்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான நிலவரங்களில் கரூர் மாவட்டம் 89.32 சதவீத வாக்குப்பதிவுடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து அதிர வைத்துள்ளது. கொங்கு மண்டலத்தின் மற்ற மாவட்டங்களான சேலம் (88.02%), நாமக்கல் (87.63%), ஈரோடு (87.59%) மற்றும் திருப்பூர் (86.33%) ஆகிய இடங்களிலும் மக்கள் அசுர வேகத்தில் திரண்டு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதேபோல் வட மாவட்டங்களில் தருமபுரி 87.28 சதவீதத்துடனும், திண்டுக்கல் 86.35 சதவீதத்துடனும் முன்னிலையில் உள்ளன. ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் 85 சதவீதத்தைத் தாண்டி ஒரு மெகா மாற்றத்தை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளன.

தலைநகர் சென்னையில் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் ஆச்சரியப்படத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த சராசரி 81.34 சதவீதமாக உள்ளது. இதில் குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதி 87.12 சதவீதத்துடன் சென்னையில் 'மாஸ்' காட்டியுள்ளது. ஆனால், மயிலாப்பூர் தொகுதி மட்டும் 72.79 சதவீதத்துடன் மாநிலத்திலேயே மிகக்குறைந்த வாக்குப்பதிவைக் கொண்ட தொகுதியாகப் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 82.41 சதவீதத்துடனும், காஞ்சிபுரம் 84.92 சதவீதத்துடனும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் அரசியல் அனலைக் கூட்டியுள்ளன.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை மதுரை 77.89 சதவீதமும், திருநெல்வேலி 75.10 சதவீதமும் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் 73.44 சதவீதத்துடன் மாநில அளவில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு கொண்ட மாவட்டமாக உள்ளது. இருப்பினும், தூத்துக்குடி (77.56%), தென்காசி (79.28%) மற்றும் விருதுநகர் (82.16%) ஆகிய மாவட்டங்களில் மக்கள் ஆர்வம் குறையாமல் ஓட்டுப் போட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் (78.07%), திருவாரூர் (80.65%) மற்றும் நாகப்பட்டினம் (83.15%) ஆகிய பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. மலைப்பிரதேசமான நீலகிரியில் 75.90 சதவீத மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

வாக்குப்பதிவுக்கான அதிகாரப்பூர்வ நேரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 6 மணிக்குப் பிறகு தேர்தல் அலுவலர்கள் அனைத்துத் தொகுதிகளிலிருந்தும் தரவுகளைச் சேகரித்துத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பிறகு தபால் வாக்குகள் மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் முன்னதாகவே பதிவு செய்த வாக்குகளின் விவரங்கள் இதனுடன் சேர்க்கப்படும். இன்று இரவு 8 மணி அளவில் தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த மற்றும் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் முழுமையாக வெளியாகும். 78 சதவீதம் என்கிற பழைய ரெக்கார்டை தூக்கி எறிந்த தமிழக வாக்காளர்களின் இந்த எழுச்சி, மே 4-ஆம் தேதி வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com