வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate) வாங்குவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை

காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார் என சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
How to get a Legal Heir Certificate? What are the required documents? Online application process
வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate) வாங்குவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைAI Generated
Published on: 
Updated on: 
3 min read

ஒருவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்படும் வாரிசு சான்றிதழ் அவசியம். தாசில்தாருக்கே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான கடைமை உள்ளது. சொத்துக்களைப் பிரச்சனை இல்லாமல் வாரிசுகள் பகிர்ந்துகொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் உதவும்.

வாரிசுச் சான்றிதழ் பெற யாருக்கு தகுதி உள்ளது?

தமிழ்நாடு அரசின் அரசாணை எண் G.O.(Ms.) No.478, 29.09.2022 மற்றும் அதன் திருத்த அரசாணை G.O.(Ms.) No.110, 13.03.2024 ஆகியவற்றின்படி, இறந்தவரின் குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்து வாரிசுச் சான்றிதழில் இடம்பெறக்கூடியவர்கள் மாறுபடுகிறார்கள்.

  • திருமணமானவர் இறந்திருந்தால்: கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் (சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் உட்பட), தந்தை, தாய்.

  • மறுமணம் செய்தவர் இறந்திருந்தால்: முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள், தற்போதைய கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்.

  • திருமணமாகாதவர் இறந்திருந்தால்: தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்.

  • கணவன், மனைவி இருவரும் இறந்து, குழந்தைகள் இருந்தால்: குழந்தைகள் மற்றும் இறந்தவரின் பெற்றோர்.

  • கணவன், மனைவி இருவரும் இறந்து, குழந்தைகள் இல்லாவிட்டால்: பெற்றோர் மற்றும் சகோதரர்கள், சகோதரிகள்.

ஒன்றுக்கு மேற்பட்ட கணவன் அல்லது மனைவி இடம்பெறுவது தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட தனிநபர் சூழலைப்பொருத்து தீர்மானிக்கப்படும்.

வாரிசுச் சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன?

சுய உறுதிமொழிப் பத்திரம்.

விண்ணப்பதாரரின் அடையாளச் சான்று.

அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் முகவரிச் சான்று.

அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பிறந்த தேதி சான்று (அல்லது TC).

உறவை உறுதிப்படுத்த திருமணப் பதிவுச் சான்றிதழ் அல்லது கடவுச்சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டைகள் அல்லது தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தரவுகள்

இறந்த நபரின் இறப்பு சான்றிதழ்.

இறந்த நேரடி சட்ட வாரிசின் இறப்புச் சான்றிதழ்.

இறந்தவரின் இருப்பிடச் சான்று.

வாரிசுச் சான்றிதழ் எப்போதெல்லாம் தேவை?

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசு பணியில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு மற்றும் பணியின் பலன்கள் பெறுவதற்கும் பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

மேலும், இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

மேலும் வாசிக்க: பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? ஆன்லைனில் விண்ணப்பிப்பது முதல் பட்டா கிடைப்பது வரை முழு விவரம்!

வாரிசுச் சான்றிதழ் எங்கே விண்ணப்பிப்பது? நடைமுறை என்ன?

வாரிசு சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும்.

வாரிசு சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகளின் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட மேலே சொல்லப்பட்ட சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

விண்ணப்பித்த எத்தனை நாட்களில் வாரிசுச் சான்றிதழ் கிடைக்கும்?

இறப்பு சான்றிதழ் இல்லாமல் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் மரணத்தை பதிவு செய்ய வேண்டும்.

இறப்பு சான்றிதழுடன் வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்த 30 நாட்களில் சான்றிதழ் வழங்கப்படும். விசாரணையின் பொருட்டு கால தாமதம் ஆனால விண்ணப்பதாரருக்கு காரணம் தெரிவிக்கப்படும்.

வாரிசுச் சான்றிதழ் மறுக்கப்பட காரணங்கள் என்ன? மறுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவுகள் தொடர்பாக சட்டச் சிக்கல் அல்லது தெளிவின்மை இருப்பது, இறந்தவரின் சொத்துகள் தொடர்பாக வாரிசுகளுக்குள் வழக்கு அல்லது உரிமைப் பிரச்சினை இருப்பது, விண்ணப்பதாரருக்கும் இறந்தவருக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்த போதுமான ஆவணங்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் கொடுக்க மறுக்கலாம்.

வட்டாட்சியரின் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் (RDO) ஓராண்டுக்குள் மேல்முறையீடு செய்யலாம். RDO உத்தரவுக்கு எதிராக மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO) ஓராண்டுக்குள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம். சட்டபிரச்னைகள் வரும்போது நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.

வாரிசுச் சான்றிதழ் - ஆன்லைனில் பெறுவது எப்படி?

தமிழ்நாடு இ-சேவை இணையதளத்தில் citizen login மூலம் உள் நுழைந்து, CAN பதிவு செய்ய வேண்டும். பின்னர் Revenue Department பிரிவில் REV-114 – Legal Heir Certificate என்பதைத் தேர்வு செய்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி எந்த நிலையில் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். இறந்தவர் கடைசியாக வழக்கமாக வசித்த பகுதியில் உள்ள வட்டாட்சியரிடமே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

காணாமல் போனவரின் குழந்தைகளுக்கு வாரிசுச் சான்றிதழ் கிடைக்குமா?

ஒருவர் காணாமல்போய் 7 ஆண்டுகளைக் கடந்துவிட்டால் அவரது வாரிசுகளுக்கு வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்க முடியும்.

காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார் என சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இறந்தவரின் சொத்துக்கள், பண பலன்கள் உள்ளிட்ட மேலே சொல்லப்பட்ட உரிமைகளை அடைய வாரிசுச் சான்றிதழ் அவசியம் என்றாலும் சொத்துரிமையைத் தீர்மானிக்கும் ஆவணம் அல்ல. இறந்தவருக்கும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தும் ஆவணம் மட்டுமே.

எனவே, உயில் அல்லது சொத்துப் பிரச்சினை இருப்பதை தனியாக கையாள வேண்டும்.

இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)

ஒருவரின் முதலீடுகள்/பங்குகள் மற்றும் திரும்பப்பெறும் கடனில் இருக்கும் உரிமையை நிரூபிக்க நீதிமன்றத்தில் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) பெற வேண்டும். இது இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925-ன் கீழ் நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்தால் நான்கு பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

Official Sources: https://www.tnesevai.tn.gov.in/citizen/ServiceList.html?

How to get a Legal Heir Certificate? What are the required documents? Online application process
வீட்டு EB Bill திடீரென அதிகமாக வருகிறதா? மின் கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி? புகார் கொடுப்பது எங்கே?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.