

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
செங்கோட்டையன் நீக்கம்!
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமான ஒன்று என்பதை தமிழ் நாடு நமக்கு அறிந்தது. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது.
இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார்.
ஆனால் இதற்கு பிறகு அதிமுக -விலிருந்து எடப்பாடியால் ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணையப் போகிறது என்ற பேச்சுக்கள் எழுந்தன.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான், முத்துராமலிங்க தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் கட்சி கட்டுப்பாட்டை மீறியதோடு எடப்பாடியையும் கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது.. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.. “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்” செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்திருந்தார்.
பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்
கடந்த சில தினங்களாகவே செங்கோட்டையன் பரபரப்பான விஷயங்களை பொது வெளியில் பேசிவருகிறார். ஏரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக எடபடியும் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இந்த சூழலில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர் “அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியதே பாஜகதான்” என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அவர், “தர்மயுத்தம் நடத்தி வந்த ஓபிஎஸ்ஸை அழைத்து நீங்கள் ஒருங்கிணைப்பாளர், நான் இணை ஒருங்கிணைப்பாளர், நீங்கள் துணை முதல்வர், நான் முதல்வர் என பேசி அவரை அழைத்து வந்து பின்னர் அவரையும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான். 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் நான் உள்பட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமெனகேட்டிருந்தோம். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் அந்த 18 பேரையும் அவர் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்” என அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்தார்.
கொடநாடு விவகாரம்
கொடநாடு விவகாரத்தில், A1 எடப்பாடிதான் என ஏற்கனவே பெரும் குண்டை இறக்கியிருந்த நிலையில், எல்லாவற்றிற்கும் சிபிஐ விசாரணை கேட்கும் அதிமுக, கொடநாடு விவகாரத்தில் இதுவரை சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்? ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் ஓபிஎஸ் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதல்வரானவர் என்பதை இந்த நாடறியும். எடப்பாடி பழனிசாமியால்தான் நான் அமைச்சரானேன் என அவர் கூறியிருந்தார். ஆனால் என்னை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியிருக்க மாட்டார். , "என்னுடன் யார் பேசினாலும் உடனே அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர். இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால் கட்சி தேய்ந்து அமாவாசையாகிவிடும்” என பேசியிருக்கார். இவரின் இந்த பேச்சு அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.