"செந்தில் பாலாஜி வாயை திறந்தால் தி.மு.க அரசு கவிழ்ந்து விடும் " எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாயை திறந்தால் தி.மு.க அரசு கவிழ்ந்து விடும் என அதமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தின் வாயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி ஆரின் முழு உருவ வெண்கல சிலையை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக உழைத்தார்கள். ஆனால் கருணாநிதி மக்களுக்காக உழைக்கவில்லை அவர் குடும்பத்தினருக்காகவே தான் உழைத்தார். அ.தி.மு.க ஜனநாயக அமைப்புள்ள கட்சி. இதில் தான் சாதாரண தொண்டனும் உச்சப்பட்ச பதவிக்கு வர முடியும். சாதாரண தொண்டன் பொதுச்செயலாளர் வரை அ.தி.மு.க வில் தான் ஆக முடியும். ஆனால் தி.மு.க வில் பணம் படைத்தவர்களுக்கு தான் அதிகாரம் கிடைக்கும் என விமர்சித்துள்ளார்.
மேலும், தி.மு.க அமைச்சர்களுக்கு தற்போது தூக்கமே போய் விட்டது. வருமான வரித்துறை, அமலாக்கதுறையை பார்த்து ஜீரம் வந்து விட்டது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவர் வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் தான் அனைத்து அமைச்சர்களும் அவரை சென்று பார்த்தார்கள். செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்து விட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். ஆட்சியை காப்பாற்றவே செந்தில் பாலாஜியை காப்பாற்றுகிறார்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களை பற்றி சிந்திக்காத ஒரே தலைவர் ஸ்டாலின் தான். விவரம் தெரியாத பொம்மை முதலமைச்சராக தான் ஸ்டாலின் இருக்கிறார். யாரோ எழுதி கொடுத்ததைத்தான் அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணி, மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்துகிறார்கள். அதே போல வீட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, கஞ்சா அதிக அளவு விற்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்த தவறிய அரசாக தி.மு.க அரசு உள்ளது என குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் வெடி குண்டு கலாச்சாரம் வளர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக சாடியுள்ளார்.
இதையும் படிக்க:ரூ.1,000 உரிமைத் தொகை - முதலமைச்சர் ஆலோசனை ..!