"சௌமியா அன்புமணி ஜெயித்தால்.. தர்மபுரி அதர்மபுரியாக மாறிவிடும்" - ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை!

"மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள், அந்தச் சின்னத்தில் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது"
 ராமதாஸ்
Published on
Updated on
1 min read

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் மிகவும் உருக்கமாக "என் இரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அனுபவித்து வரும் மரண வேதனை யாருக்கும் தெரியாது என்றும், அன்புமணி எப்போது தனது பேச்சைத் தட்டிவிட்டு, கட்சியின் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுப் பணத்திற்காக அலையத் தொடங்கினாரோ, அன்றே தான் ஒரு தந்தையாகச் செத்துவிட்டதாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தான் சிந்திய இரத்தத்தை, அன்புமணி இன்று 'சமூக நீதி வியாபாரமாக' மாற்றிவிட்டதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு தேர்தல் இடத்தையும் பல கோடிகளுக்கு விற்று, தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டதாக அவர் சாடியுள்ளார். "பெற்ற தந்தையையே கவனிக்காத ஒருவன், உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கித் தருவார்?" என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், அன்புமணி தனது மனைவி மற்றும் மகள்களை அதிகாரத்திற்காகப் பயன்படுத்துவதாகவும், இவரால் சாதாரண பாட்டாளி பெண்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாகத் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி குறித்துப் பேசும்போது, அவர் வெற்றி பெற்றால் தர்மபுரி விரைவில் 'அதர்மபுரியாக' மாறும் என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார். மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் மகன்கள் அவரைச் சாகும் வரை கவனித்துக் கொண்டதை உதாரணம் காட்டிய ராமதாஸ், தனக்குப் பிறந்த மகனோ தான் உயிரோடு இருக்கும்போதே தன்னைச் செத்துப்போனதாகக் கருதிச் செயல்படுவதாகக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தகப்பனுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இருக்க முடியாது என்றும் அவர் அந்த அறிக்கையில் கொந்தளித்துள்ளார்.

மேலும், பாமகவின் அடையாளமான மாம்பழம் சின்னத்தைப் பற்றிப் பேசுகையில், "மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள், அந்தச் சின்னத்தில் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது" என்று ஒரு அதிரடி குண்டைப் போட்டுள்ளார். அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அன்புமணியின் துரோகக் கும்பலுக்குப் போடும் ஓட்டு, உங்களைப் பெற்ற தகப்பன் தலையில் நீங்களே மண்ணைப் போடுவதற்குச் சமம் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. மேலும், அன்புமணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவரது கும்பலை வீழ்த்த வேண்டும் என்றும், தர்மம் தான் ஜெயிக்கும் என்றும் அவர் தனது அறிக்கையை முடித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com