

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த், முதல்வர் விஜயின் தலைமைத்துவத்தைப் பாராட்டியதுடன், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் N. ஆனந்த், "இன்று சட்டப்பேரவையில் என்ன கத்தினாலும், என்ன கனவு கண்டாலும் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது” என்றும் “தேர்தல் நேரத்தில் அந்த 15 நாட்கள் தான் நீங்களா? நாங்களா? என்று பார்க்கணும் மற்ற 5 வருஷமும் எங்களோடு இணைந்து மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்று சொன்னீர்கள் என்றால் முதல்வரும், அமைச்சர்களும் ஒத்துழைப்பு கொடுப்போம்… அடுத்த 15 நாள் சண்டைக்கு பிறகும் நாங்க தான் ஆட்சிக்கு வருவோம்" என்றும் பேசியிருந்தார்.
திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் பேச்சுக்கு “பத்திரிகையாளர்களை வச்சி எடக்கு முடக்கா கேள்வி கேட்க வைக்கிறீங்க இதுக்கெல்லாம் நாங்க ஓடல, பயப்படல. நாங்க எங்க முதலமைச்சர் பாணியில் சாதிச்சு காட்டுவதே எங்கள் நோக்கம்” பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்று பதிலளித்தார்.
தொடர்ந்து முதல்வர் விஜய் குறித்து பேசிய அவர், "நீங்கள் எல்லோரும் முதல்வர் விஜயை திரையில் பார்த்திருப்பீர்கள். கடந்த மூன்று மாதங்களாக நேரிலும் பார்த்து வருகிறீர்கள். ஆனால் நான் அவரை 30 ஆண்டுகளாக நெருக்கமாக அறிந்தவன். அவர் சினிமாவில் மட்டும் தான் நடிப்பார்; வெளியே நடிக்கத் தெரியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். அவர் முதல்வர் அல்லது ஸ்டார் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. புகழ்ச்சி அவருக்கு பிடிக்காது" என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், "ஒரு சதவீதம் வாக்குகள் கூட வாங்க மாட்டார், ஐந்து சதவீதம் வாக்குகள் வாங்குவார் என்று பலர் பேசினார்கள். யூடியூப் மற்றும் டிவிகளில் வாடகை வாய்கள் கூட அவரை விமர்சித்தன. ஆனால் மக்களுக்காகவும், எங்களுக்காகவும் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டார்" என்றார்.
மேலும், "தைரியமாக சிங்கம் போல நிற்போம்; நிச்சயமாக வெற்றி பெறுவோம். உனக்கு பயமாக இருக்கிறதா என்று எங்களிடம் அவர் கேட்டார்" எனவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.
அதிமுகவை விமர்சித்த அவர், "சர்கார் திரைப்படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பீர்கள். அந்த பேனரை கிழித்ததால்தான் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். அமைச்சர் ஆனந்த் நீண்ட நேரம் முதல்வர் விஜய் குறித்து பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். அப்போது, "நீங்கள் உங்கள் தலைவர்களைப் பற்றி அடிக்கடி பேசுகிறீர்கள். நாங்கள் முதல் முறையாக எங்கள் தலைவரைப் பற்றி பேசுகிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "அமைச்சர் கூறும் பல வரலாற்றுத் தகவல்களை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பேசட்டும், மக்கள் தெரிந்து கொள்ளட்டும்" என்று கூறி அவரது பேச்சைத் தொடர அனுமதி அளித்தார். இதனால், இன்றைய சட்டப்பேரவை அமர்வில் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தை விட, நீண்ட நேரம் முதல்வர் விஜய் குறித்து புகழ் பேசியதால் எதிர்க்கட்சிகள் குறிக்கிட்டதால் சட்டமன்றத்தில் சில சலசலப்பு நிலவியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்