

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தோத்துப்பாறை அணையில் அரசாணை இல்லாமல் தவெக நிர்வாகிகள் நீரை திறந்து விட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அணையில் இருந்து நீர் திறந்தது மட்டுமில்லாமல் தவெக நிர்வாகி ஷேக் அலி, அதனை ரீல்ஸாகவும் வெளியிட்டார். மேலும் விவசாய சங்கத்தினர் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அரசாணை இல்லாமல் அணையை திறந்த தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இதுதொடர்பான அவரது சமூக வளைத்தல பதிவில், "சோத்துப்பாறை அணையை திறந்து விட்ட தவெகவினரை கைது செய்ய வேண்டும்: அணைகளுக்கும் பாதுகாப்பில்லையா?
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அப்பகுதி தவெக நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டு, அதை ரீல்சாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டிய அணைகளுக்குள் கூட ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக நுழைந்த்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
அணைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அணைகளில் உள்ள நீர் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும். அணைகளில் அளவுக்கு அதிகமாக நீர் உள்ள நேரத்தில் அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், 2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது போலவும், 2025-ஆம் ஆண்டில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது போலவும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்த எந்த கவலையும், அக்கறையும் இல்லாமல் அணையை தவெகவினர் எவ்வாறு திறந்தனர்; அவர்கள் அணையைத் திறக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பன உள்ளிட்ட வினாக்கள் எழுகின்றன. இவற்றுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும்.
காவல் நிலையம், மருத்துவமனைகளில் நள்ளிரவில் ஆய்வு, புலியைத் துரத்துதல், அணையைத் திறத்தல் என அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை தங்களின் விருப்பம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய விதிமீறல்களுக்காக இதுவரை எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தண்ணீரைத் திறந்து விட்ட தவெகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.