

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பத்மஜா பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும், அவர் மது போதையில் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்குச் சென்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஜூலை மாதமே ஆட்சியரின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல் ரகுமான் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய மகளிர் ஆணையமும் இந்தப் புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, 7 நாட்களில் அறிக்கை தர வேண்டி தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தவும், தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யவும் தமிழக காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியது.
இதனையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாணையில் “ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்த நிலையில் அப்போதே நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். எடுத்திருந்தால் இப்போது அவர் புகாரளித்திருக்க மாட்டார்" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பான வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணையில், எஸ்.பி.க்கு பதில் வேறு உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும். ஐஜி அல்லது டிஐஜி விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உள் விசாரணை குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், தன்னையும் வழக்கில் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என பெண் ஆட்சியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, "விசாரணையை ஒரு ஐஜி கண்காணிக்க வேண்டும்.. வழக்கின் விசாரணை அறிக்கையை டிசம்பர் 22ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 27ல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதனைதொடர்ந்து தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் மற்றும் காவலர்கள் வீட்டிற்கு சீருடை இல்லாமல் ரகசியமாக விசாரணை நடத்த வந்துள்ளனர். இந்நிலையில் MLA அருளவிக்னேஷின் ஆதரவாளர்கள், வருகை தந்து வீட்டின் முன் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயநீதிமன்றத்தில் அறிவுறுத்தலின் படி உடனடியாக காவல்துறையின் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தெரிய வருகிறது. சமூக வலைத்தளம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்