கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பத்மஜா பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்தது.
மேலும், அவர் மது போதையில் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்குச் சென்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான ஷேக் அப்துல்லா ரஹ்மான் புகார் அளித்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர்கள் தரப்பிலும் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையமும் இந்தப் புகாரைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தவும், தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யவும் தமிழக காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியது. மேலும், விசாரணையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொண்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்திருந்தார். கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் தொடர்பான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதற்குப் பழிவாங்கும் நோக்கில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் புகாரில் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. இதில் காவல்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியரிடம் நடத்திய விசாரணையை எழுத்து பூர்வமாக காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்