'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், தற்போது தமிழக அரசியலில் மட்டுமின்றி, கட்சியின் நிர்வாக மற்றும் சட்டரீதியான எதிர்காலத்திலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த வழக்கில் காவல்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்றத்தின் கேள்விகள் அனைத்தும் தவெக-விற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இந்தக் கடுமையான சட்ட நெருக்கடியில் இருந்து மீள, நடிகர் விஜய் நேரடியாக டெல்லியில் உள்ள தேசியத் தலைமையின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நேற்றைய தினம் அவர்களின் முன் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்றைய தினம் நீதிபதி செந்தில்குமார், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். பின்னர், வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி செந்தில் குமார், 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்தையும் அனுமதித்துள்ளீர்கள் என அரசுக்கும் அதிருப்தி தெரிவித்தார். மேலும், காவல் துறை கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் எனத் தெரிவித்த நீதிபதி, நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன எனச் சுட்டிக்காட்டி இருந்தனர்.
நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை தனது க்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத்தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.
மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.
பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.
துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்” என பதிவிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை வெறும் நீதிமன்ற கண்டனத்துக்காக போடப்பட்டது என நாம் மேலோட்டமாக பார்க்க முடியாது. “மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும்” என முதல்வர் தனது பதிவில் கூறியுள்ளார்.
SIT அமையும் பட்சத்தில் விஜய் மீது வழக்கு தொடரப்படும், எனவும் எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்தியாவிலே நடந்த பெருந்துயரங்களில் ஒன்று இது. மேலும் நேற்றைய நீதிமன்ற குறிப்பில் ‘Man Made Disaster’ என்னும் சொல்லை நீதிபதி பயன்படுத்தியுள்ளார். விஜயை பார்க்க வந்த மக்கள் இறந்துள்ளனர். எனவே இதனை முகாந்திரமாக கொண்டு தமிழக அரசு விஜய் மீது நடவடிக்கை எடுத்தால் அது பெரும் பதற்றத்தை உண்டாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.