பாஜக -வை கழட்டிவிடுகிறாரா இபிஎஸ்..!? “இத பண்ணா விஜய் உள்ள வந்துருவாரே..” பதறும் பாஜக!!

எங்கே விஜய்யுடன் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பாஜக-அதிமுக கூட்டணி 8 மாதங்களுக்கு...
tn elections
tn elections
Published on
Updated on
3 min read

2026 தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான இதுவரை பார்க்காத ஒன்று என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தான் மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன.. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

செங்கோட்டையன் நீக்கம்!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமான ஒன்று  என்பதை தமிழ் நாடு நமக்கு அறிந்தது. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது. 

இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார். 

ஆனால் இதற்கு பிறகு அதிமுக -விலிருந்து எடப்பாடியால் ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணையப் போகிறது  என்ற பேச்சுக்கள் எழுந்தன. 

இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான்,  முத்துராமலிங்க தேவரின்  நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் கட்சி கட்டுப்பாட்டை மீறியதோடு எடப்பாடியையும்  கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது..  மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.. “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்” செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்திருந்தார்.

 பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன் 

கடந்த சில தினங்களாகவே செங்கோட்டையன் பரபரப்பான விஷயங்களை பொது வெளியில் பேசிவருகிறார். ஏரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக எடபடியும் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இந்த சூழலில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர் “அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியதே  பாஜகதான்” என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர் அவர், “தர்மயுத்தம் நடத்தி வந்த ஓபிஎஸ்ஸை அழைத்து நீங்கள் ஒருங்கிணைப்பாளர், நான் இணை ஒருங்கிணைப்பாளர், நீங்கள் துணை முதல்வர், நான் முதல்வர் என பேசி அவரை அழைத்து வந்து பின்னர் அவரையும்  கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்.  அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான். 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் நான் உள்பட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமெனகேட்டிருந்தோம். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் அந்த 18 பேரையும் அவர் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்” என அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்தார்.

கொடநாடு விவகாரம் 

கொடநாடு விவகாரத்தில், A1 எடப்பாடிதான் என ஏற்கனவே பெரும் குண்டை இறக்கியிருந்த நிலையில்,  எல்லாவற்றிற்கும் சிபிஐ விசாரணை கேட்கும் அதிமுக, கொடநாடு விவகாரத்தில் இதுவரை சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்? ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் ஓபிஎஸ் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதல்வரானவர் என்பதை இந்த நாடறியும். எடப்பாடி பழனிசாமியால்தான் நான் அமைச்சரானேன் என அவர் கூறியிருந்தார். ஆனால் என்னை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியிருக்க மாட்டார். , "என்னுடன் யார் பேசினாலும் உடனே அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர். இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால் கட்சி தேய்ந்து அமாவாசையாகிவிடும்” என பேசியிருக்கார். இவரின் இந்த பேச்சு அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 மாதத்திற்கு முன்பே கூட்டணி!

இந்த அரசியல் சிக்கல்கள் குறித்து பல விமர்சகர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் “விஜய் Factor” எங்கே விஜய் -உடன் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பாஜக-அதிமுக கூட்டணி 8 மாதங்களுக்கு முன்பே உருவானது. மேலும் கூட்டணி அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில்,  எடப்பாடியை கூட்டணியின் தலைவர் எனவோ, அதிமுக தலைமையில்தான் ஆட்சியையும் அமையும் எனவோ உத்தரவாதமிக்க பேச்சுக்கள் எழாததால், கள அளவில்  இந்த கூட்டணி இணையவே இல்லை. அதனால்தான் திமுக துவங்கி அனைவரும் ‘பொருந்தா கூட்டணி’ என விமர்சித்தனர்.

அதற்கு ஒரு காரணமும் உண்டு டிடிவி -யை கூட்டணியில் இணைக்கும்போது, ‘எடப்பாடி முதல்வர் இல்லை’ என சொல்லித்தான் அழைத்ததாக ஒரு தரப்பு விமர்சகர்கள் கோரி வருகின்றனர்.

எடப்பாடியின் ஆசை!!

ஆனால் எடப்பாடி எதாவது அதியசம் நடந்து பாஜக -வை விட்டு விலகி விட மாட்டோமா என வேண்டிக்  கொண்டிருக்கிறாராம். ஆனால் கொடநாடு, அதிமுக சின்னம் என அவர்கள் மீதும் ஏகப்பட்ட வழக்கு உள்ளது. அமித்ஷா -விற்கு 2026 -ல் பாஜக-அதிமுக வெற்றியைவிடவும் திமுக -வின் தோல்விதான் முக்கியம்.  மேலும் சசிகலா, டிடிவி, செங்கோட்டையன், ஓபிஎஸ் என அனைவரும் அதிமுக -வை பாஜக விடம் ஒப்படைக்க உழைத்தவர்கள் என்ற சர்ச்சையும் எழாமல் இல்லை.

ஆனால் விஜய் வந்தால் நிச்சயம் திமுக -வை வீட்டுக்கு அனுப்பலாம் என எடப்பாடி நினைக்கிறார், மேலும் தனக்கு இருக்கும் ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தியும்விட்டார். ஆனால் சமீபத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழுவில் கூட விஜய் அதிமுக உடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக சொல்லியிருந்தார். அதனால், “எதற்கு எடப்பாடி இப்படி போய் கேட்டு அவமானப்படுகிறார்..?” என்றும் வசை பாடுகின்றனர். 

பாஜக -வின் திட்டம்..!

ஆனால் ஒருவேளை திமுக -வின் தோல்விதான் முக்கியம். நாம் வெளியேறினால், அப்போது விஜய் உள்ளே வருவார். அதிமுக -விஜய் கூட்டணி வெற்றியடையாவிட்டாலும், தொங்கு சட்டமன்றம் உருவாகும். அப்போது நாம் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என பாஜக நினைத்தால் அப்போது நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். பாஜக இல்லாத அதிமுக -வில் விஜய் இருந்தால் அது திமுக -வுக்கு பெரும் சவால், என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.

ஆனால் விஜய் எப்போது என்ன செய்வார் என யாருக்கும்  தெரியாது, ஒருவேளை திமுக -வை அழிக்கும் நோக்கில் செய்யல்பட்டால், “அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிடுமோ” என்று பாஜக -வும் அஞ்சுகிறது என்கின்றனர் விஷயம் தெரிந்த சிலர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com