

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேமுதிக தொண்டர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய விஜய பிரபாகரன், தேமுதிக பணக்காரர்களால் தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும், ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்காக கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய கட்சி என்றும் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக தாங்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
மேலும், மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்த நிலையில், தற்போதைய சூழலில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக விமர்சித்த அவர், தற்போதைய ஆளும் கட்சிக்கு ஆரம்பகட்டத்தில் அரசியல் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த தேர்தலின்போது தேமுதிகவினர் விலை உயர்ந்த கார் வாங்கியதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாக விஜய பிரபாகரன் குற்றம்சாட்டினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் கார் இருப்பதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது கார் இல்லை என்றும் ஆட்டோவில் வருவதாகவும் கூறுவது முரண்பாடாக இருப்பதாக விமர்சித்தார்.
அரசியலில் உண்மைக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து .. இப்போது வீட்டில் இருக்கும் பெண்கள் கூறுகின்றனர் நாங்கள் சீரியல் பார்பதில்லை.. சட்டசபையை தான் பார்க்கிறோம்.. சட்டசபை என்ன மெகா சீரியலா.. வீசில் அடிக்கிறார்கள் பட்டு படுகிறார்கள்” என முதல்வருக்கு கேள்வி எழுப்பி விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து, ஆளும் தரப்பினர் மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய விஜய பிரபாகரன், தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடர் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் அவையாக இல்லாமல், பட்டிமன்றம் போல் மாறிவிட்டதாக விமர்சித்தார். தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை கூறுவதிலும், வாழ்த்து தெரிவிப்பதிலுமே நேரத்தை செலவிட்டு வருவதாகவும் அவர் சாடினார்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜயை நேரடியாக குறிப்பிட்ட விஜய பிரபாகரன், “எனக்கு உங்கள் மீது எந்தக் கோபமும் இல்லை அண்ணன் விஜய். நீங்கள் முதலமைச்சரான பிறகு அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தீர்கள். பெரியார் நினைவிடத்திற்கும் சென்றீர்கள். “விஜய் அண்ணா.. அண்ணியாரை சந்திக்க வேண்டாம் கேப்டன் சமாதிக்கு சென்றாரா?” என கேள்வி எழுப்பினார். கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரது மகன் விஜய பிரபாகரன், தற்போதைய அரசியல் சூழல், ஆளும் தரப்பு மீதான விமர்சனங்கள் மற்றும் முதலமைச்சர் விஜயின் 100 நாள் ஆட்சி குறித்து எழுப்பிய கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்