"உடையை வைத்து விமர்சிக்காதீங்க" - அமைச்சர் கீர்த்தனாவுக்காக களமிறங்கிய கனிமொழி மற்றும் தமிழிசை.. அரசியலைத் தாண்டி ஆதரவு!

கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன...
minister keerthana troll issue
minister keerthana troll issue
Published on
Updated on
2 min read

தமிழக வெற்றிக் கழக அரசில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் கீர்த்தனா. சிவகாசி சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாக, தொழில் முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக அவர் நவநாகரீக உடையுடன் ஆங்கிலத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும் கீர்த்தனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனால் கீர்த்தனாவை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விஜய் நீக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இதனை கீர்த்தனா தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்த நிலையில், மேலைநாட்டு பாணியில் உடை அணிந்த பெண் ஒருவர் காரில் இருந்து இறங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா எனக் கூறப்பட்டதுடன், அவரது உடை மற்றும் தோற்றம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டு தினங்களுக்கு முன்பு சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கீர்த்தனா, தன்னைச் சுற்றி பரப்பப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். சமூக வலைதளங்களில் தனது பெயரில் பரப்பப்படும் வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், திட்டமிட்டு தன்னை அவதூறு செய்யும் வகையில் அந்த வீடியோ பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

kanimozhi and tamilisai soundarajan
kanimozhi and tamilisai soundarajan

மேலும், “அந்த வீடியோவில் இருப்பது நானாகவே இருந்தாலும் அதில் என்ன தவறு?” எனக் கேள்வி எழுப்பிய கீர்த்தனா, பெண்களின் உடை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விமர்சிக்கும் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும், பெண்களின் தனிப்பட்ட தேர்வுகளை வைத்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். கீர்த்தனாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அவருக்கு அரசியல் கட்சி வேறுபாடின்றி ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, திமுக எம்.பி. கனிமொழி, கீர்த்தனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது நடத்தப்படும் தனிப்பட்ட மற்றும் அநாகரிகமான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

“கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயல்படும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடு” என கனிமொழி விமர்சித்திருந்தார். மேலும், பெண்கள் இதுபோன்ற விமர்சனங்களைக் கடந்தே வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பாஜக மூத்த பெண் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் கீர்த்தனா விவகாரத்தில் பெண்களின் கண்ணியத்தை முன்னிறுத்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் Troll-களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவதற்கான காரணமாக மாறக்கூடாது என தெரிவித்த தமிழிசை, ஒரு பெண் அமைச்சரை அவரது உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விமர்சிப்பதற்குப் பதிலாக, அவரது செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தானும் இதுபோன்ற ட்ரோல்களை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட தமிழிசை, “ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுப்பது எந்த ‘Team’-ஐச் சேர்ந்தது என்பதல்ல; அது மனிதநேயத்தின் அடையாளம்” என தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தான் ஒரு அசைக்க முடியாத பாஜக பெண் தலைவர் என்றும், தனது கொள்கையிலும் கட்சியிலும் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கீர்த்தனாவைச் சுற்றியுள்ள இந்த சர்ச்சையில், ஆளும் தவெகவைச் சேர்ந்த அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த கனிமொழியும், பாஜகவைச் சேர்ந்த தமிழிசையும் பெண்களின் கண்ணியத்தை முன்வைத்து ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அதேவேளையில், கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி பெண் அரசியல்வாதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் பேசுவது, இந்த விவகாரத்தை புதிய அரசியல் விவாதமாக மாற்றியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com