கல்விக்கொள்கை குழுவிலிருந்து ஜவகர் விலகல் - காரணமான சம்பவங்களுக்கு ஏஐஎஸ்இசி கடும் கண்டணம்

மாநில கல்விக்கொள்கை வகுப்பு குழுவிலிருந்து பேராசிரியர் லெ.ஜவகர் நேசன் விலகுவதற்கு காரணமாக இருந்த சம்பவங்களுக்கு அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) கடும் கண்டனம்
கல்விக்கொள்கை குழுவிலிருந்து ஜவகர் விலகல் - காரணமான சம்பவங்களுக்கு   ஏஐஎஸ்இசி கடும் கண்டணம்
Published on
Updated on
1 min read

தேசிய கல்விக்கொள்கை 2020 (என்இபி 2020) க்கு தமிழக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் என்இபி 2020 ஐ மறுப்பதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்மட்ட கமிட்டியை அமைத்தது. தமிழக மக்கள் மட்டுமல்லாது நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்கள் தமிழக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை மனதார வரவேற்றனர்.

ஆனால் இல்லம்தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற என்இபி 2020 ல் கூறப்பட்ட திட்டங்களை தமிழக அரசாங்கம் அமல்படுத்தத் தொடங்கியதுமே அதன் நோக்கம் தெரிந்துவிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பும் எழுந்தது. தங்களது இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக திடீரென தமிழக கல்வி அமைச்சர்கள் ‘என்இபி 2020 இல் சில நல்ல அம்சங்கள்’ இருப்பதாக பேசத்தொடங்கினர்.

இந்தப் பின்னணியில் தமிழக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மாநிலக் கல்விக்கொள்கை வகுப்பதற்கான உயர்மட்ட கமிட்டியின் நடவடிக்கைகளில் அனைத்து நியதிகளையும் மீறி நேரடியாகவே தலையிட்டனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவில் போற்றப்படும் கல்வியாளரும் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கும் கமிட்டியின் உறுப்பினருமான பேராசிரியர் ஜவகர் நேசனை என்இபி 2020 ல் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு மாநில கல்விக் கொள்கையை வகுக்கவேண்டும் என்று மிரட்டினர் என்று செய்தி வருகிறது. இது தமிழக மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகமாகும். இத்தகைய துரதிஷ்டவசமான சம்பவங்களை உயர்நிலைக் கமிட்டியின் தலைவர் மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியடையச் செய்கின்றன. இதனால் பேராசிரியர் ஜவகர் நேசன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமிட்டியிலிருந்து விலகியுள்ளார். 

பேரா. ஜவகர் நேசன் கல்விக் கொள்கை குழுவில் இதுவரை ஆற்றிய பங்களிப்பை ஏஐஎஸ்இசி வரவேற்கும் அதே வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகபூர்வ, மதச்சார்பற்ற, விஞ்ஞானபூர்வ கல்வியை உயர்த்திப்பிடிக்கும் பேராசிரியர் ஜவகர் நேசன் போன்ற கல்வியாளர்களை கொண்ட மறுசீரமைக்கப்பட்ட புதிய உயர்மட்டக் கல்விக் குழுவை உருவாக்கி அதன் மூலம் தமிழக மக்களின் நியாயமான விருப்பங்களுக்கு ஏற்றவாறு செயல்படவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறது.

என்இபி 2020க்கு ஏற்றவாறு மாநில கல்விக்கொள்கையை வகுப்பதென்ற இத்தகைய ஜனநாயகவிரோத சர்வாதிகார அணுகுமுறைக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்குமாறும், அனைவருக்குமான ஜனநாயகபூர்வ மதச்சார்பற்ற விஞ்ஞானபூர்வக் கல்வியை மக்களுக்கு வழங்குவதை உத்திரவாதப்படுத்தும் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மாநில அரசாங்கத்தை நிர்பந்திக்கவேண்டுமென்றும் ஏஐஎஸ்இசி அறைகூவல் விடுக்கிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com