“கரூர் சம்பவத்தில் திமுக கைது நடவடிக்கை எடுக்கவில்லை” - தவெக அரசின் நிலைப்பாடு என்ன?.. மீண்டும் பேசுபொருளான 41 பேர் உயிரிழப்பு!

எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்காக அவர்களை சிறையில் அடைக்கும் அணுகுமுறையை...
udhayanidhi controversy
udhayanidhi controversy
Published on
Updated on
2 min read

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதில் அவர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் பற்றி கூறியுள்ளது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை அர்த்தம் கொண்ட கருத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில், அந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறு பிரிவுகளின் கீழ் அவசரமாக வழக்குப்பதிவு செய்து, எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது அளவுக்கு மீறிய நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நண்பகல் வரை அவரைக் கைது செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்ததாகவும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை எனக் கூறி காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது கவலைக்குரியது என்றும், இது சட்டரீதியான கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அர்னேஷ் குமார்வழக்கில், 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இயந்திரத்தனமாக கைது செய்யக் கூடாது என்றும், கைது அவசியமா என்பதை காவல்துறை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்?

எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசின் பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னரும் தவெக தலைவர் விஜய் மீது கடந்த திமுக ஆட்சியில் அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், அரசியல் நாகரிகத்தைப் பேணிய திமுக, எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்காக அவர்களை சிறையில் அடைக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதைய ஆட்சியில் சமூக வலைதளப் பதிவுகள், பொதுக்கூட்டப் பேச்சுகள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்காக எதிர்க்கட்சியினரை உடனடியாக கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். காவிரி–மேகதாது விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, காவிரி உரிமைக்காகக் குரல் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதில் அரசு அவசரம் காட்டுவது தமிழக விவசாயிகளின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கை என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். “அரசியல் விமர்சனங்களையும் எதிர்க்குரல்களையும் கைது நடவடிக்கைகளால் ஒடுக்காமல், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அரசு மதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்” என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com