“தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது” - கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்.. எல்லையில் போலீசார் குவிப்பு!

கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன
Karnataka Bandh today
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது, மேகதாது அணை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன.

இருப்பினும், முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அத்திப்பள்ளி பகுதியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், அங்கு கர்நாடக போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநில எல்லையில் உள்ள பல கடைகள் முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி மூடப்பட்டுள்ளன. தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் ஓசூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லையை கடந்து செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இரு மாநில காவல் துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். காவிரி நீர் தகராறு தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில், பெங்களூரு நகர காவல்துறை பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில் சில அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவினாலும், இதுவரை பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. தற்போது நிலைமையை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com