
மழை நீர் வடிகால்கள் அமைக்க சாலைகளில் பள்ளம் தோண்டும் போது உரிய பாதுகாப்பு சட்ட விதிகள் பின்பற்றபடவில்லை என்றால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிக்காக எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
இந்த பள்ளங்களில் முதியவர்களும், சிறுவர்களும் விழுந்து படுகாயம் அடைவதோடு பல்வேறு உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளதாகக் கூறி, மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பாதாகை, தடுப்புகள் என எந்த வித பாதுகாப்பும் விதிகளும் பின்பற்றாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார.
அந்த மனுவில், மழை நீர் வடிகால் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மழை நீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து இறந்தவர் நபர்களின் விவரங்கள் இல்லாமல் இந்த மனு பொத்தம் பொதுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மழை நீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டும் போது உரிய பாதுகாப்பு சட்ட விதிகள் பின்பற்றபடவில்லை என்றால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.