பாலியல் குற்றச்சாட்டில் கைதானார் மதுர் சத்யா! பெங்களுருவில் கைது செய்த தமிழக போலீஸ்..

குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெண்களுக்கு ஆதரவாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் அக்கட்சி ஒரு புகாரையும்..
பாலியல் குற்றச்சாட்டில் கைதானார் மதுர் சத்யா! பெங்களுருவில் கைது செய்த தமிழக போலீஸ்..
Published on
Updated on
1 min read

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சமூக ஆர்வலர் மதுர் சத்யா, வியாழக்கிழமை அன்று பெருநகர சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை மாலை பெங்களூருவில் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தனது முற்போக்கு கருத்துக்களினால் ஊடகங்களில் பெரிதும் அறியப்பட்டவர்தான் சத்யா. பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரை மார்ச் 14 அன்று கட்சியிலிருந்து நீக்கினர். அதைத் தொடர்ந்து, அவர் மீது குற்றம் சாட்டிய பெண்கள் சார்பில் பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மார்ச் 16 அன்று, குற்றச்சாட்டுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சத்யாவை அதன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளிலிருந்தும் நீக்கியது. மேலும், குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெண்களுக்கு ஆதரவாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் அக்கட்சி ஒரு புகாரையும் அளித்தது.

மார்ச் 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டக் குழு, குற்றச்சாட்டுகள் குறித்து விவாதித்ததைத் தொடர்ந்து, சத்யா கட்சியிலிருந்தும், அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF), இந்திய கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு சங்கம் (ISCUF) ஆகிய அதன் இணை அமைப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதாக சிபிஐ தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா முன்னதாக அறிவித்திருந்தார்.

சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சத்யா, சமூக நீதி தொடர்பான தனது பணிகளின் மூலம் பிரபலமடைந்த ஒருவர். பொறியியல் பட்டதாரியான இவர், 2019ல் தனது பெருநிறுவன வேலையை விட்டு விலகினார். பின்னர், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் நிறுவிய 'நீலம் சோஷியல்' தளத்துடன் தன்னை இணைத்து, சாதி, சமத்துவமின்மை மற்றும் அரசியல் குறித்த விளக்க வீடியோக்களை வழங்கிவந்தார். மேலும், பி.ஆர். அம்பேத்கர், பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்துக்களை மையமாகக் கொண்ட ஆய்வுக் குழுக்கள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு, சமூக நீதி தொடர்பான போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்.

மேலும், தனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து சத்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார், “எனது தரப்பை முன்வைக்க எனக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. என் வாழ்நாள் முழுவதும், நான் சந்தித்த எவருடனும் அவர்களின் வெளிப்படையான ஒப்புதலுக்குப் பிறகே எல்லாவற்றையும் செய்துள்ளேன்.” மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சட்டரீதியான வழிகளில் பதிலளிப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். தற்போது இவர் பெங்களுருவில் தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com