திருச்சியை சேர்ந்த சத்யஜோதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது சகோதரர் வெள்ளைக்காளி (எ) காளிமுத்து சென்னை புழல் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த மாதம் ‘கிளாமர் காளி’ என்ற ரவுடி மதுரையில் கொலை செய்யப்பட்டார். இதில் எனது சகோதரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. ஆனால் உள்நோக்கத்துடன் அந்த கொலையில் எனது சகோதரரையும் தொடர்புபடுத்தி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் என்ற நபர் சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் எனது சகோதரரையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தி அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதனை காரணம் காட்டி அவரை என்கவுண்டர் செய்வதற்கானக் வாய்ப்பு நிறைய உள்ளது. ஆகவே எனது சகோதரரிடம் நடத்தப்படும் விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடத்தவும், அனைத்து விசாரணைகளையும் வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "விசாரணை எனும் பெயரில் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்யப்படும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, சமீப காலமாக என்கவுண்டர் அதிகரித்து உள்ளது
"எத்தனை என்கவுண்டர்கள் சமீபமாக நடைபெற்றுள்ளன? காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
‘சுட்டுப்பிடியுங்கள்! ஆனால் காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்படுள்ளது." என கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கை வருகிற ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்