திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.தோப்புப்பட்டி அருகே உள்ள ரெட்டமலை பகுதியில் கிரஷர் (மலைப்பகுதியில் இருந்து கற்களை வெட்டி எடுக்கும் இயந்திரம்) அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 சிறுவர், சிறுமியர் சுமார் 70 அடி உயரமுள்ள மலைக்குன்றில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டமலை பகுதியில் கிரஷர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு விதிமுறைகளின்படி, கிரஷர் அமைக்கப்படும் இடத்தைச் சுற்றி 500 மீட்டர் தொலைவுக்குள் வீடுகள் மற்றும் கோவில் இருக்கக் கூடாது எனக் கூறப்படும் நிலையில், இந்த விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிரஷர் செயல்பாட்டுக்கு வந்தால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அவர்கள் கடந்த 7 மாதங்களாக நடத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனை சந்தித்த அப்பகுதி மக்கள், கனிமவளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக, கடந்த வியாழக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால் முதல்வரை சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளை நேரில் சந்தித்து, கிரஷர் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், இன்று மீண்டும் கிரஷர் அமைக்கும் பணிகள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரெட்டமலைப்பட்டியைச் சேர்ந்த சுபா (14), ஜீவா (13), வெற்றிவேல் (10), கருப்பசாமி (14) ஆகிய 4 மாணவர்கள், தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கூறி வீட்டில் தெரிவிக்காமல் இரட்டை மலைக்கரடு என்ற சிறிய மலைக்குன்றில் ஏறினர்.
சுமார் 70 அடி உயரம் கொண்ட மலைக்குன்றில் ஏறிய அவர்கள், அங்கிருந்த சுமார் 10 அடி உயர பாறையின் மீது அமர்ந்து காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரஷர் அமைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டால், பாறையில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்வோம் என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். மலை மீது நின்றிருந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வையம்பட்டி காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கிரஷர் அமைக்கும் பணிகள் நிறுத்தப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தைகள் மலை மீது இருந்து கீழே இறங்க மறுத்த நிலையில், அவர்களது பெற்றோர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, மலை மீது போராட்டம் நடத்திய மாணவி சுபாவின் தாயார் சத்தியா திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், நித்தியா என்ற மற்றொரு பெண்ணும் கடும் வெயில் காரணமாக வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை கிரஷர் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு மலை மீது இருந்து கீழே இறங்கி வந்தனர். காலை 7 மணி முதல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், காலை 11.25 மணி வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் பாறை மீது அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், “முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தால் தங்களது பிரச்சினைக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த வியாழக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பியதால் குழந்தைகள் மனவேதனை அடைந்தனர். இதன் காரணமாகவே இன்று மலை மீது ஏறி போராட்டம் நடத்தினர்” எனத் தெரிவித்துள்ளனர். கிரஷர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 சிறுவர், சிறுமியர் மலை மீது ஏறி பல மணி நேரம் போராட்டம் நடத்திய சம்பவம் ரெட்டமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்