அனிதா ராதாகிருஷ்ணன் வரிசையில் மரகதம், சத்யபாமா..! 2009 - 2026 இடைத்தேர்தல் சொல்லும் அரசியல் பாடம் என்ன?

2009 திருச்செந்தூர் இடைத்தேர்தல் உணர்த்திய முக்கியமான பாடம், கட்சியிலிருந்து விலகுவது மட்டுமே ஒருவரின் அரசியல் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை என்பதுதான்
Anita Radhakrishnan
Published on: 
Updated on: 
2 min read

தமிழக அரசியலில் கட்சி மாறுதல்களும், பின்னர் இடைத்தேர்தலில் இன்று வெற்றி பெறுவதும் புதிதல்ல. அந்த வகையில், 2009-ம் ஆண்டு திருச்செந்தூர் இடைத்தேர்தல் அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது தமிழக இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அனிதா ராதாகிருஷ்ணன் பெற்ற வெற்றியும், அன்றைய அரசியல் சூழலும் மீண்டும் கவனம் பெறுகின்றன.

தூத்துக்குடி மாவட்ட அரசியலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் தனது அரசியல் பயணத்தை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் தொடங்கினார். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ஆனால், 2006-க்குப் பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவரது அரசியல் பாதையை மாற்றியது. 2009-ம் ஆண்டு ஜூலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, 2009 டிசம்பர் 19-ம் தேதி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணனும், அதிமுக சார்பில் அம்மன் டி. நாராயணனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் 75,223 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 28,362 வாக்குகளைப் பெற்ற நிலையில், 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த சில மாதங்களிலேயே, அதிமுகவிடம் இருந்த தொகுதியைத் திமுகவுக்குக் கைப்பற்றிக் கொடுத்தது அவரது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

2009 இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார். தொடர்ந்து தொகுதியில் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன், பின்னர் திமுக அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.

அதிமுகவில் தொடங்கிய அரசியல் பயணம், கட்சியிலிருந்து விலகல், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தல், திமுகவில் இணைதல் எனப் பல திருப்பங்களைக் கடந்து, திருச்செந்தூரில் தனது செல்வாக்கை நிரூபித்தவர் அனிதா ராதாகிருஷ்ணன்.

தற்போதைய தமிழக இடைத்தேர்தல் அரசியல் சூழலில் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோரின் அரசியல் நிலைப்பாடுகளும் தேர்தல் முடிவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கட்சி அடையாளம், தனிப்பட்ட செல்வாக்கு, உள்ளூர் ஆதரவு, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை எனப் பல காரணிகள் இடைத்தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

2009 திருச்செந்தூர் இடைத்தேர்தல் உணர்த்திய முக்கியமான பாடம், கட்சியிலிருந்து விலகுவது மட்டுமே ஒருவரின் அரசியல் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை என்பதுதான். தொகுதி மக்களின் ஆதரவைப் பெறுவதும், அதை வாக்குகளாக மாற்றுவதுமே வெற்றியின் அடிப்படை.

அந்த வகையில், அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணம் இன்றைய இடைத்தேர்தல் களத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் நிலையில், மரகதம், சத்யபாமா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது தேர்தல் முடிவுகளும், தொகுதி மக்களின் தீர்ப்பு தான். ஆனால் இந்த இடைத்தேர்தல் ஒரு விஷயத்தை கூடுதலா சொல்கிறது. தவெக வேட்பாளர் மரகதம் மற்றும் சத்யபாமா ஆகியோர், 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு வேட்பாளர்கள் ஆதரவுகள் மட்டும் இல்ல, முக்கியமாக விஜய் அலை இன்னும் ஓயவில்லை என்பதே இதன் முக்கிய காரணமாகும். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com